போலந்தில் குவியும் உக்ரைன் பிரஜைகள் !
போலந்தில் சுமார் 19 மில்லியன் உக்ரைனியர்கள் தஞ்சம் புகுந்துள்ளதாக அந்த நாட்டு எல்லை பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி, ரஷ்யா தனது அண்டை நாடு மீது படையெடுத்ததை தொடர்ந்து, உக்ரைனியர்கள் இவ்வாறாக தஞ்சம் புக ஆரம்பித்ததாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் 17 ஆயிரத்து 900 உக்ரைனியர்கள் போலந்து நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கிடையிலான போர் ஆரம்பமாகியதன் பின்னர், போலந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடாக மாறியிருப்பதாக அந்த நாட்டு அதிபர் ஆண்ட்ரெஜ் டுடா கடந்த ஆண்டு தெரிவித்தார்.
இந்த போர் ஆரம்பமாவதற்கு முன் மற்றும் அதன் பின் சுமார் 3 மில்லியனுக்கும் அதிகமான உக்ரைனியர்கள் போலந்துக்கு குடிபெயர்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், உக்ரைனில் இருந்து போலந்துக்கு குடிபெயர்ந்துள்ளவர்களுக்கு கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், இரு நாடுகளுக்கிடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தற்போது அதிகளவான உக்ரேனியர்கள் போலந்தில் தஞ்சமடைய ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, உக்ரைனியர்கள் போலந்தில் தஞ்சமடைவதற்கு ஆதரவாக அந்த நாட்டின் 62 வீதமானனோர் ஆதரவு தெரிவித்ததாக அண்மையில் வெளியான ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்தமை குறிப்பிடத்தக்கது.