குடும்ப அரசியலை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் – அனுரகுமார திஸாநாயக்க
அடுத்த தேர்தலில் 98 வருட அரசியல் முடிவுக்கு கொண்டு வரப்படவுள்ளது. எதிர்காலத்தில் தந்தையிடத்தில் இருந்து மகனுக்கும் மகன் இடத்திலிருந்து தந்தைக்கும் வழங்கப்படும் அரசியலை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். தற்போது இரண்டு பாதைகளே உள்ளன. பழைய வீதியில் சென்று படுகுழியில் விழுந்துள்ளோம்.
நாம் புதைக்கப்படலாம். அவ்வாறு இல்லையென்றால் புதிய பாதையில் சென்று நாம் அனைவரும் எழுந்திருக்க முடியும். படுகுழியில் விழுவதை விடுத்து புதிய பாதையில் எழுச்சி பெறுவோம் என அழைப்பு விடுக்கிறேன் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
நாட்டு மக்களுக்கு தற்போது இரண்டு பாதைகளே உள்ளன. பழைய வீதியில் சென்று படுகுழியில் விழுந்துள்ளோம். நாம் புதைக்கப்படலாம். அவ்வாறு இல்லையென்றால் புதிய பாதையில் சென்று நாம் அனைவரும் எழுந்திருக்க முடியும். படுகுழியில் விழுவதை விடுத்து புதிய பாதையில் எழுச்சி பெறுவோம் என அழைப்பு விடுக்கிறேன்.
நாம் புதிய மறுமலர்ச்சியை உருவாக்குவோம். அது தொடர்பில் மக்களை தெளிவுபடுத்த காத்திருக்கிறோம். எம்மால் முடிந்தவற்றை நாம் செய்வோம். எமக்கு முன்னால் உள்ள எதிரிகள் எமக்கு முக்கியம் அல்ல. நாம் தோல்வியடைந்தாலும் அடுத்த நாளிலிருந்து அரசியலில் ஈடுபடுவோம். நாம் இதற்கு முன்னரும் தோல்வியடைந்தும் கைவிடவில்லை அல்லவா? அடுத்த தேர்தலிலும் தோல்வி அடைந்தாலும் நாம் அரசியலில் ஈடுபடுவோம்.
எனினும் அவர்கள் தோல்வி அடைந்தாலும் அவர்களுக்கு அனைத்தும் கிடைக்கும். 98 வருடங்கள் தமது குடும்பம் அரசியல் செய்வதாக நாமல் கூறியதைக் கேட்டேன். அதன் மூலம் அவர் எதனை கூறுகின்றார். 98 வருட அரசியல் தற்போது முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தந்தையிடத்தில் இருந்து மகனுக்கும் மகன் இடத்திலிருந்து தந்தைக்கும் வழங்கப்படும் அரசியலை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.
அரசியலில் தோல்வி அடைந்தால் எமக்கு ஒன்றும் கிடைக்க போவதில்லை. எனினும் அவர்கள் சில விடயங்களை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். இலங்கையில் இதுவரையில் 8 ஜனாதிபதிகள் பதவி வகித்துள்ளனர். அவர்களில் மூவர் உயிரிழந்துள்ளனர். சந்திரிக்காவும் மைத்திரியும் மஹிந்தவும் கோட்டாவும் ஒரே மேடையில் அல்லவா நிற்கிறார்கள். தோல்வியடைவதற்காக அவர்கள் இந்த செயற்பாடுகளில் அவர்கள் ஈடுபட வில்லை என்றார்.