இந்திய கடற்படையில் புதிய ஆய்வுக் கப்பல் ‘ஐஎன்எஸ் சந்தாயக்’ இணைப்பு!
‘ஐஎன்எஸ் சந்தாயக்’ ஆய்வுக் கப்பல் இந்திய கடற்படையில் நேற்று முறைப்படி இணைக்கப் பட்டது.
இந்திய கடற்படைக்காக 4 ஆய்வுக் கப்பல்களை கொல்கத்தாவில் உள்ள ‘கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் இன்ஜினீயர்ஸ்’ நிறுவனம் கட்டி வருகிறது. இதில் முதல் கப்பலான ‘ஐஎன்எஸ் சந்தாயக்’ கடந்த ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி இந்திய கடற்படையிடம் வழங்கப்பட்டது. இதையடுத்து துறைமுகம் மற்றும் கடலில் விரிவான சோதனை நடைபெற்றது. இந்நிலையில் இந்திய கடற்படையில் ‘ஐஎன்எஸ் சந்தாயக்’ நேற்று முறைப்படி இணைக்கப்பட்டது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்படை தளத்தில் நடைபெற்ற விழாவில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இதனை கடற்படையில் இணைத்து வைத்தார். கடற்படை தளபதி அட்மிரல் ஆர்.ஹரிகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.
விழாவில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசும்போது, “இந்திய கடற்படை மிகவும் வலிமை அடைந்துள்ளது. இந்தியப் பெருங்கடல் மற்றும் இந்திய பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்புக்கு எதிரான பிரச்சினைகளுக்கு முதல் பதிலடி தருபவராக நாம் மாறியுள்ளோம். சமீபத்தில் நாம் 80 மீனவர்களை கடற்கொள்ளையர்களிடம் இருந்துமீட்டோம். இது இந்திய கடற்படையின் விருப்பம் மற்றும் வலிமையை காட்டுகிறது” என்று தெரிவித்தார்.