கிராமப்புற தொழிலாளர்களுக்கு எதிராக பாஜக செயல்படுகிறது – ராகுல் காந்தி

கிராமப்புற தொழிலாளர்களுக்கு எதிராக பாஜக செயல்படுகிறது – ராகுல் காந்தி

காங்கிரஸின் இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணத்தில் உள்ள ராகுல்காந்தி, கிராமப்புற தொழிலாளர்களுக்கு எதிராக பாஜக செயல்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். ராகுல்காந்தி மேற்கு வங்கத்தில், கிராமப்புற தொழிலாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் தெரிவித்துள்ள அவர் ‘காங்கிரஸ் கட்சி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை (MNREGA) கொண்டுவந்து இன்றுடன் (02.02.2024) 18 ஆண்டுகள் நிறைவடைகிறது. இன்று மேற்கு வங்கத்தின் எம்என்ஆர்இஜிஏ பணியாளர்களைச் சந்தித்தேன்.

வங்காளத்தில் 76 லட்சம் குடும்பங்கள் இந்த திட்டத்தை சார்ந்து இருக்கின்றன. ஆனால் அங்கு இந்த திட்டத்திற்கான நிதி முழுவதுமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தப் பணியாளர்களுக்கு அவர்களின் உழைப்பிற்கு தரப்படவேண்டிய பணம் தரப்படவில்லை’ எனப் பதிவிட்டுள்ளார்.

‘கடந்த இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் 7 கோடி தொழிலாளர்களின் வேலை அட்டைகள் நீக்கப்பட்டுள்ளன. ஆதார் அட்டை கட்டாயத்தால் 35% கிராமப்புற தொழிலாளர்கள் எம்என்ஆர்இஜிஏ திட்டத்தின் பலன்களைப் பெற முடியாதவர்களாகியுள்ளனர்.

எதிர்கட்சியின் அழுத்தத்தால், நரேந்திர மோடியால் இந்த திட்டத்தை முழுவதுமாக ரத்து செய்ய முடியவில்லை. தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் அநீதியால் நாட்டின் பொருளாதார கட்டமைப்பு வலுவிழக்கிறது. அதனால்தான் தொழிலாளர் உரிமை காங்கிரஸ் நடைப்பயணத்தின் முக்கிய குறிக்கோளாக உள்ளது.

பெரிய தனியார் நிறுவனங்களால் மட்டுமல்ல, கிராமப்புற கடின உழைப்பாளிகளாலும்தான் இந்த நாடு உருவாகியுள்ளது என அவர் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This