அரசாங்கத்தரப்பில் 48 பேர் ரணிலுக்கு ஆதரவு?; மகிந்தவிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை

அரசாங்கத்தரப்பில் 48 பேர் ரணிலுக்கு ஆதரவு?; மகிந்தவிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை

அரசாங்கத்தை பிரநிதித்துவப்படுத்தும் அமைச்சரவை , இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 48 பேர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்காக விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த 24ஆம் திகதி இரவு கொழும்பில் இரு இடங்களில் இரு குழுக்களாக இணைந்து இந்த கலந்துரையாடலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, அரசாங்கத்தை பிரநிதித்துவப்படுத்தும் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் 30 பேர் கொழும்பு ப்ளவர் வீதியில் சந்தித்து கலந்துரையாடியுள்ள நிலையில் அரசாங்கத்தின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தலவத்துகொட பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மொட்டுச் சின்னத்தில் முன்னிலையானால் ஏற்படும் சூழல் தொடர்பில் இங்கு இரு தரப்பும் நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, தமது ஆதரவை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்குவதாக இரு தரப்பும் இறுதி இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன.

அதன்படி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுப்பது, அரசியல் அலுவலகத்தை ஸ்தாபித்தல், வாக்களிப்பு நிலைய பிரதிநிதிகளை நியமித்தல், ஊடகச் செயற்பாடுகளை முன்னெடுப்பது போன்ற விடயங்களில் இரு தரப்பினரும் அதிக கவனம் செலுத்தி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களின் ஆதரவை வழங்குவது தொடர்பில் விரிவான வேலைத்திட்டமொன்றை தயாரிப்பது தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமின்றி, அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளிட்ட அரசாங்கத் திட்டங்கள் தொடர்பில் மக்களுக்குத் தெரிவிப்பதற்கான முறையான பொறிமுறையொன்றை தொகுதி மட்டத்தில் தயாரிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் உட்பட சுமார் 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 25ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை நாடாளுமன்றத்தில் சந்தித்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்சியின் பெரும்பான்மையானவர்கள் தற்போதைய ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதால், கட்சியினால் வேறு ஒரு வேட்பாளரை முன்வைத்தால், அது கட்சியின் வாக்காளர் தளத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என, முன்னாள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, கட்சியில் இருந்து வேறு ஒரு வேட்பாளரை முன்வைக்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This