மத்திய இடைக்கால பாதீடு 2024 – முக்கிய அம்சங்கள்!
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (01) 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பாதீட்டை தாக்கல் செய்தார். இது அவர் தொடர்ச்சியாக தாக்கல் செய்யும் 6-வது பாதீடு ஆகும். விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், 2024-25 நிதி ஆண்டுக்கான முழு பாதீடு, புதிய அரசு அமைந்த பிறகே அறிவிக்கப்படும். எனவே, இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பாதீடு ஆகும்.
இடைக்கால பாதீட்டை தாக்கல் செய்த அவர், “கடந்த 10 ஆண்டுகளாக இந்திய பொருளாதாரம் பெரும் பாய்ச்சலில் முன்னேறி வருகிறது. பிரதமர் மோடியின் பல்வேறு திட்டங்களால் நாடு பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. வளர்ச்சியின் பயன்கள் ஏழை, எளிய மக்களை அடையத் தொடங்கியுள்ளன. எங்களின் வளர்ச்சி பணிகளுக்காக மக்கள் எங்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. மக்கள் மீண்டும் வலுவான பெரும்பான்மையுடன் எங்களை ஆட்சியில் அமர்த்துவர்.
சமூக நீதியை அரசின் கொள்கையாக கொண்டு செயல்படுகிறோம். சமூக நீதி என்பது அரசின் வாக்கியமாக இருந்ததை திட்டங்களுக்கான மந்திரமாக பயன்படுத்தி வருகிறோம். நாட்டில் 4 பிரிவினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் ஆகியோருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அனைவருக்கும் வங்கி கணக்கு, அனைவரும் சமையல் எரிவாயு என்ற நிலையை எட்டியுள்ளோம்.
2047ல் புதிய இந்தியாவை படைப்போம். கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். மகளிர் இட ஒதுக்கீடு, முத்தாக் தடை போன்ற பெண்களுக்கான சட்டங்களை பாஜக அரசு நிறைவேற்றி உள்ளது. கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள உலக நாடுகள் தடுமாறிய நிலையில், இந்தியா சிறப்பாக கையாண்டது. ஊழல் எதிர்ப்புக்கும், வாரிசு அரசியலுக்கும் எதிராக நாங்கள் போராடி வருகிறோம். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவு 2027-ல் நனவாகும்.
80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் உணவு பொருட்கள் சென்றடைந்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் மேல் படிப்பில் சேரும் பெண்களின் எண்ணிக்கை 28% உயர்ந்துள்ளன. 10 ஆண்டுகளில் 7 ஐஐடிக்கள், 3,000 புதிய ஐடிஐ, 319 பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் 19 எய்ம்ஸ் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 1.1 கோடி இளைஞர்கள் திறன் இந்தியா திட்டத்தின் கீழ் இணைந்துள்ளனர். பிரதான அமைச்சர் வீடு காட்டும் திட்டம் மூலம் 70% பெண்களுக்கு வீடு வழங்கப்பட்டுள்ளன. நாட்டில் 11.8 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக உதவித்தொகை வழங்கப்படுகிறது. முத்ரா திட்டத்தின் கீழ் 43 கோடி முறை வங்கிக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 3000 ஐ.டி.ஐக்கள் தொடங்கப்பட்டுள்ளன” என்று பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.
முக்கிய அம்சங்கள்:
1. அடுத்த 5 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகள் கட்டித்தரப்படும்.
2. வீட்டின் மொட்டை மாடியில் சோலார் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம்.
3. நாடு முழுவதும் கூடுதலாக மருத்துவ கல்லூரிகள் அமைப்பது தொடர்பாக குழு அமைக்கப்படும்.
4. கர்ப்பப் பை புற்றுநோயை தடுக்க தடுப்பூசி திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
5. ஊட்டச்சத்து குறைபாடுகளை சரிசெய்ய புதிய செயலி அறிமுகம் செய்யப்படும்.
6. ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை ஊக்குவிக்க ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
7. அங்கன்வாடி மற்றும் ஆஷா பணியாளர்களுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
8. பால் உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
9. நாடு முழுவதும் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி சார்ஜிங் மையங்கள் அதிகரிக்கப்படும்.
10. தொழில்நுப்டம் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை ஊக்குவிக்க ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
11.40,000 சாதாரண ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயில் பெட்டிகளாக தரம் உயர்த்தப்படும்.
12. தொழில் தொடங்க வட்டியில்லாக் கடன் வழங்குவதற்காக ₹1 லட்சம் கோடியில் புதிய நிதியம் அமைக்கப்படும்.