கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கையர்கள் மீட்பு!

கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கையர்கள் மீட்பு!

அரபிக்கடலில் காணாமல் போன “லொரன்சோ புத்தா4 ” படகு சீசெல்ஸ் கடலோர பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்டதாக இலங்கை அரசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை சீசெல்ஸ் கரையோரப் பாதுகாப்புப் படையினர் இன்று (29) பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிப்குழாம் பிரதானியுமான சாகல ரத்னாயக்கவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தனர்.

ஆழ்கடல் மீன்பிடிப் படகான ”லொரன்சோ புதா 4” கடந்த ஜனவரி 12 ஆம் திகதி 06 கடற்தொழிலாளர்களுடன் திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திலிருந்து தனது முதல் பயணத்தை ஆரம்பித்தது. கரையில் இருந்து 1,160 கடல் மைல் தொலைவில் உள்ள அரபிக் கடலில் சோமாலிய கடற்கொள்ளையர்களால் இந்தப் படகு கைப்பற்றப்பட்டதாக மீன்பிடிக் கூட்டுத்தாபனத்திற்கு அறிவிக்கப்பட்டது.

இதன்படி, காணாமல் போன படகு தொடர்பில் தேடிப்பார்க்குமாறு இலங்கை கடற்படையினர் பஹ்ரைனில் அமைந்துள்ள 40 நாடுகளை உள்ளடக்கிய கூட்டு கடல் படையணிக்கு அறிவித்தனர்.

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகைக் கண்டுபிடிக்க சீசெல்ஸ் கரையோரப் பாதுகாப்புப் படை விசேட தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியது. சோமாலிய கடற்கொள்ளையர்களின் பிடியில் இருந்த படகை அவர்கள் கண்டுபிடித்னர். அத்துடன், இரண்டு சோமாலிய கடற்கொள்ளையர்களும் சீசெல்ஸ் கரையோரப் பாதுகாப்புப் படையினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,”லொரன்சோ புத்தா4 ” ஆழ்கடல் மீன்பிடிப் படகில் இருந்த 06 கடற்தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சோமாலியக் கடற்கொள்ளையர்களினால் கடத்தப்பட்ட ஆழ்கடல் மீன்பிடிப் படகை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான பணிகள், ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவின் வழிகாட்டலின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தற்போது குறித்த படகு சீசெல்ஸில் உள்ள விக்டோரியா துறைமுகத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This