தமிழரசுக் கட்சியின் நிர்வாகிகள் தெரிவு: கூட்ட முடிவுகள்?

தமிழரசுக் கட்சியின் நிர்வாகிகள் தெரிவு: கூட்ட முடிவுகள்?

திருகோணமலையில் நேற்று நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் தெரிவு தொடர்பாக அறிவிக்கப்பட்ட முடிவுகளை அப்படியே அந்தரத்தில் பேணவும், இறுதித் தீர்மானங்களை எடுப்பதைத் தள்ளிப் போடவும் இன்று மதியம் மாவை சேனாதிராஜாவின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது என்று கட்சியின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறீதரன் எம்.பி. தெரிவித்தார்.

மேற்படி கூட்டத்தில் சிறீதரன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோருடன் கலந்துகொண்டிருந்த சுமந்திரன் எம்.பி. இந்த விவகாரத்தில் இணக்கப்பாடு ஒன்றும் எட்டப்படாத நிலையில் கூட்டத்தை முடித்துக் கொண்டு வெளியேறினார் என்றும் தெரிகின்றது.

கட்சியின் தலைமைப் பொறுப்பை தாம் இன்னுமே ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், கட்சித் தலைவராக மாவை சேனாதிராஜாவே தொடர்கின்றார் என்றும் சிறீதரன் தெரிவித்தார்.

”இரண்டு தரப்புகளுக்கு இடையிலும் கொதிநிலை நிலவுகின்றது. ‘வெட்டு ஒன்று துண்டு இரண்டாக’ முடிவு எடுக்க முடியாத நிலைமை உள்ளது. எல்லோரையும் சமாளித்து, அரவணைத்து, ஓர் இணக்கமான முடிவைக் காண வேண்டி இருப்பதால் சம்பந்தப்பட்ட தரப்புகளோடு நான் நேரடியாகப் பேசவிருக்கின்றேன். அதற்காக சற்றுக் காலம் இந்த விடயத்தில் முடிவெடுப்பதைத் தள்ளிப் போடத் தீர்மானித்துள்ளோம்.

பொதுச்செயலாளர் பதவி விடயத்தில்தான் இழுபறி நீடிக்கின்றது. அதுவும் திருகோணமலை – மட்டக்களப்புத் தரப்புகளுக்கு இடையிலான சிக்கலாக உள்ளது. இருதரப்புகளும் விட்டுக் கொடுத்து, பொதுச்செயலாளர் பதவியைக் கால அளவீட்டில் பங்கிட்டு, ஏதேனும் இணக்கத்திற்கு வர முடியுமா என்றும் பார்க்கின்றோம்.

இப்பிரச்சினைக்குத் தீர்வு காண எங்களுக்குச் சற்று கால அவவாசம் தேவைப்படுகின்றது. மாவை சேனாதிராஜா அடுத்து வரும் நாள்களில் சிங்கப்பூர் செல்கின்றார். அவர் பெப்ரவரி 10ஆம் திகதிக்குப் பின்னர் நாடு திரும்புவார். அதன் பின்னர் இப்பிரச்சினை பற்றி ஆராய்ந்து ஒரு முடிவெடுப்போம். அதுவரை தற்போது உள்ள நிலைமை அப்படியே தொடரும்.” – என்று சிறீதரன் எம்.பி. மேலும் கூறினார்.

CATEGORIES
TAGS
Share This