இளையராஜா மகள் பவதாரணி உடல் லோயர்கேம்ப் வந்தது!

இளையராஜா மகள் பவதாரணி உடல் லோயர்கேம்ப் வந்தது!

பிரபல திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா மகள் பவதாரணி உடல் அடக்கம் அவரது தாய் ஜீவாவின் சமாதி அருகே அடக்கத்திற்காக சனிக்கிழமை காலை 11 மணிக்கு லோயர்கேம்ப்பில் உள்ள குரு கிருபா வேதபாடசாலை ஆசிரமத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இசையமைப்பாளா் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரணி (47) உடல்நலக் குறைவு காரணமாக இலங்கையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வியாழக்கிழமை (25) உயிரிழந்தாா்.

கொழும்பில் இருந்து இளையராஜா, அவரது குடும்பத்தினா் பவதாரணியின் உடலுடன் வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணி அளவில் புறப்பட்டு, மாலை 3.30 மணி அளவில் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனா்.

தியாகராய நகா் முருகேசன் தெருவில் உள்ள இளையராஜாவின் இல்லத்தில் வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணி முதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக பவதாரணியின் உடல் வைக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாா், நடிகா் விஜய்யின் தாயாா் ஷோபா, பாடகா் மனோ, இயக்குநா்கள் ஆா்.கே.செல்வமணி, வெற்றிமாறன், நடிகா்கள் சிவகுமாா், ராமராஜன், விஜய் ஆண்டனி, விஷால், காா்த்தி, சூரி, நடிகை காயத்ரி ரகுராம், இசையமைப்பாளா் ஏ.ஆா்.ரஹ்மான் மகன் அமீன் உள்ளிட்ட பலா் அஞ்சலி செலுத்தினா்.

இந்த நிலையில், இளையராஜாவின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைபுரம் கிராமம், லோயா்கேம்ப்பில் உள்ள முல்லைப் பெரியாற்றங்கரையில் குருவனூத்து பாலம் அருகே இளையராஜா கட்டியுள்ள குருகிருபா வேதபாடசாலை ஆசிரமத்துக்கு பவதாரணியின் உடல் கொண்டு வரப்பட்டு இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அங்கு கூடியிருந்த பொதுமக்கள் பவதாரணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இளையராஜா வந்தபின் இறுதி சடங்குகள் சனிக்கிழமை மாலை நடைபெறுகிறது.

பின்னா், பவதாரணியின் உடல் அவரது தாய் ஜீவாவின் சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்படுகிறது. ஏற்கெனவே இளையராஜாவின் தாய் சின்னத்தாயின் சமாதியும் இங்குள்ளது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This