பீகாரில் பரபரப்பு: பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நாளை தொடக்கம்!
பீகார் மாநில முதல்-மந்திரியும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார், கடந்த 2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலையும், 2020 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலையும் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்து சந்தித்தார். அதன் பிறகு பா.ஜ.க-உடனான கூட்டணியில் இருந்து விலகினார். அதன் பிறகு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க-வை வீழ்த்துவதற்காக ‘இந்தியா’ கூட்டணியை அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். இந்தியா கூட்டணி கட்சிகளுடன் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், காணொலி காட்சி மூலம் நடந்த இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. அதனைத்தொடர்ந்து, அவர் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி பா.ஜ.க-வுடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியானது.
அதனைத்தொடர்ந்து, பாட்னாவில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் அழைத்த தேநீர் விருந்தினை துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவ் புறக்கணித்த நிலையில், முதல்வர் நிதிஷ் குமார் தேநீர் விருந்தில் கலந்துகொண்டுள்ளார்.
இந்நிலையில், பீகார் மாநில பாஜக செயற்குழு கூட்டம் நாளை தொடங்கி இரண்டு நாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநில பா.ஜ.க பொறுப்பாளர் வினோத் தாவ்டே நாளை பாட்னாவிற்கு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பீகார் அரசியலில் பரபரப்பான சூழல் நிழவி கொண்டிருக்கும் இந்த நிலையில் பாஜக செயற்குழு கூட்டம் நாளை நடைபெறுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.