ஜெயலலிதா முழு உருவ வெண்கல சிலை – எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்!
நெய்வேலியில் இன்று (22) ஜெயலலிதா முழு உருவ சிலையை எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நெய்வேலி நகர அ.தி.மு.க. மற்றும் என்.எல்.சி.அண்ணா தொழிலாளர்கள், ஊழியர்கள் சங்கம் சார்பில் நெய்வேலி டவுன்ஷிப் செவ்வாய் சந்தை அருகே ஜெயலலிதா முழு உருவ வெண்கல சிலை ரூ.10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை 9 அடி உயரம் கொண்டது. பீடம் 7 அடியில் அமைந்துள்ளது. இந்த சிலை திறப்பு விழா இன்று (22) மாலை நடைபெறுகிறது.
இதற்கு கடலூர் தெற்கு மாவட்டசெயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் தலைமை தாங்குகிறார். இதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ஜெயலலிதா சிலையை திறந்து வைத்து சிறப்புரையாற்ற உள்ளார். இந்த விழாவில் முன்னாள் அமைச்சர்கள், மாநில, மாவட்ட, நகர ஒன்றிய, சார்பு பணி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
சிலை திறப்பு விழாவுக்காக வருகை தரும் எடப்பாடி பழனிசாமிக்கு கடலூர் தெற்கு மாவட்ட எல்லையான பணிக்கன்குப்பத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. தொடர்ந்து வழி நெடுகிலும் விளம்பர பேனர் கள், போஸ்டர்கள் மற்றும் தோரணங்கள், கட்சி கொடிகள், அலங்கார வளைவுகள் சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு ஆங்காங்கே அமைக்கப்பட்டு சாலையின் இருபுறத்திலும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் நின்று அவருக்கு வரவேற்பு அளிக்க உள்ளனர். மேலும் நெய்வேலி டவுன்ஷிப்பில் 500-க்கும் மேற்பட்ட மகளிரணியினர் பூரண கும்பமரியாதை அளிக்க உள்ளனர்.