தீர்வு விடயத்தில் வலியுறுத்தலை மட்டுமே எம்மால் வழங்க முடியும்! – தமிழ்க் கட்சிகளிடம் இந்தியத் தூதுவர் தெரிவிப்பு (UPDATE)

தீர்வு விடயத்தில் வலியுறுத்தலை மட்டுமே எம்மால் வழங்க முடியும்! – தமிழ்க் கட்சிகளிடம் இந்தியத் தூதுவர் தெரிவிப்பு (UPDATE)

இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு வழங்குமாறு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு வந்தபோது, மூடிய அறைக்குள் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். எம்மால் வலியுறுத்த மட்டுமே முடியும்.”

இவ்வாறு இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, தமிழ்த் தேசியக் கட்சிகளிடம் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதிநிதிகள் ஆகியோருக்கும் இந்தியத் தூதுவருக்கும் இடையில் நேற்று சந்திப்பு நடைபெற்றது. கொழும்பில் உள்ள இந்தியன் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போதே இந்தியத் தூதுவர் மேற்கண்டவாறு கூறினார்.

வடக்கு, கிழக்கு மீளிணைக்கப்பட வேண்டும், அதிகாரம் பகிரப்பட்டு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும், தேர்தல் நடத்தப்படா விட்டால், திரும்பத் திரும்ப நாம் உங்களிடம் இப்படி முறையிட்டுக் கொண்டிருப்பதை விட வேறு வழியில்லை என்று தமிழ்த் தரப்புக்கள் தெரிவித்தன.

முல்லைத்தீவில் மகாவலி திட்டத்தின் கீழ் தமிழ் மக்களின் பூர்வீக நிலத்தில் 600 சிங்களக் குடும்பங்களைக் குடியமர்த்தத் திட்டமிடப்படுகின்றது, திருகோணமலையில் மெகா சிட்டி திட்டத்தை முன்னெடுப்பதாகக் கூறி இந்தியாவைத் தவிர்த்து பிற நாடுகளை உள்ளீர்க்கும் முயற்சி நடக்கின்றது, மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை பெரும்பான்மை இனத்தவர்களால் ஆக்கிரமிக்கப்படுகின்றது, பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட பல விடயங்களைத் தமிழ்த் தரப்புக்கள், புதிய இந்தியத் தூதுவரிடம் சுட்டிக்காட்டின.

“இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள சமயத்தில் இந்தியா நிதி உதவி வழங்கியது. தற்போது தேர்தல் நடத்தப் பணமில்லை என்று அரசு கூறுகின்றது. தேர்தலை நடத்த இந்தியா பணம் வழங்கலாம்” என்றும் தமிழ்க் கட்சிகள் யோசனை முன்வைத்தார்கள்.

இந்தியத் தூதுவர் மேற்படி விடயங்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

அபிவிருத்தித் திட்டங்களுடன், அரசியல் தீர்வையே இந்தியா இலக்காகக் கொண்டுள்ளது என்று தூதுவர் தெரிவித்தார். இந்தியாவிலிருந்து கடலடி மார்க்கத்தில் மின்சாரம் கொண்டு வரும் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கு, கிழக்கு மீளிணைப்பு, தேர்தல், தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விவகாரங்களில் இந்தியா இன்னும் அதிக வகிபாகத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்று தமிழ்க் கட்சிகள் வலியுறுத்தின.

இதற்குப் பதிலளித்த இந்தியத் தூதுவர், “இந்தியாவும், சர்வதேசமும் இலங்கையிடம் இவற்றைச் சொல்லத்தான் முடியும். இந்தியா தொடர்ந்து இதை வலியுறுத்தி வருகின்றது. ரணில் விக்கிரமசிங்க இந்தியா வந்தபோது, பிரதமர் நரேந்திர மோடி மூடிய அறைக்குள் இந்த விடயங்களை வலியுறுத்தினார். பின்னர் பகிரங்கமாகவும் சொன்னார். இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தும்” – என்றார்.

நேற்று மாலை 4 மணியளவில் ஆரம்பித்த சந்திப்பு 5.45 மணியளவில் முடிவடைந்தது.

CATEGORIES
TAGS
Share This