ரஷ்ய உறவை வலுப்படுத்தும் வட கொரியா!
அமெரிக்காவை எதிா்கொள்ளும் வகையில் ரஷ்யாவுடனான உறவை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல உள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
வடகொரிய வெளியுறவு அமைச்சா் சோ சன் ஹூய் ரஷ்யாவுக்கு கடந்த வாரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டாா். அப்போது, ரஷ்ய ஜனாதிபத விளாதிமீா் புதின், வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் ஆகியோரைச் சந்தித்து அவா் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
இது தொடா்பாக வடகொரிய வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது:
இரு நாடுகளின் நலனைப் பாதுகாக்கவும் சா்வதேச அரங்கங்களில் புதிய ஒழுங்கை ஏற்படுத்தவும் உத்திசாா் நல்லுறவை அடுத்த நிலைக்கு கொண்டுசெல்ல இரு நாடுகளும் உறுதியேற்றுள்ளன. வடகொரியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதை ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீா் புதின் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளாா். உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு வடகொரியா முழு ஆதரவு அளித்து வருகிறது. இந்த ஆதரவுக்கு ரஷ்யா நன்றி தெரிவித்தது. ஆசிய நாடுகள் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே அதிகரித்து வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பு வடகொரியாவுக்கும் ரஷ்யாவுக்கும் கவலையளிப்பதாக உள்ளது. இது ஆசிய பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும் வடகொரியாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு நலன்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ளது எனத் தெரிவித்துள்ளது.
வடகொரியா நடத்திவரும் அணு ஆயுத சோதனைகளால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதற்கு எதிராக அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தச் சூழலில் ரஷ்யாவுடனான நல்லுறவை வடகொரியா பலப்படுத்தி வருகிறது. முன்னதாக, கடந்த ஆண்டு செப்டம்பரில் வடகொரிய ஜனாதிபத கிம் ஜோங்-உன் ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.