அயோத்தி கோவிலில் நாளைமுதல் மக்களுக்கு அனுமதி!

அயோத்தி கோவிலில் நாளைமுதல் மக்களுக்கு அனுமதி!

அயோத்தி கோயிலில் சாமி தரிசனம் செய்ய நாளைமுதல் மக்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் கோயிலின் கருவறையில் பால ராமர் சிலை இன்று நண்பகல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிகழ்வையொட்டி நாடு முழுவதும் விழாக் கோலம் பூண்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியுடன், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் சிலை பிரதிஷ்டை பூஜையில் அமர்ந்திருந்தனர்.

மேலும், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் என நாட்டின் முக்கிய பிரபலங்கள் 7,000 பேர் இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

இவர்கள் அனைவரும் பால ராமரை தரிசனம் செய்ய இன்று பிற்பகல் 2 மணிக்கு மேல் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அயோத்தி கோயிலில் உள்ள ராமரை நாளைமுதல் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவுள்ளனர். ஒரு நாளைக்கு 3 லட்சம் போ் வரை தரிசனம் மேற்கொள்ள வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

காலை 7 முதல் 11.30 மணி வரையும், பிற்பகல் 2 மணிமுதல் இரவு 7 மணிவரையும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.

மேலும், காலை 6.30 மணிக்கும், இரவு 7.30 மணிக்கும் நடத்தப்படும் சிறப்புப் பூஜையை காண மக்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது. இதற்கான முன்பதிவை https://srjbtkshetra.org/ என்ற இணையதளத்தில் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோயில் திறக்கப்பட்ட சில நாள்களுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்படும் பட்சத்தில் தரிசன நேரத்தை அதிகரிக்கவும் கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This