காசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியது!
ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. 4-வது மாதமாக தொடரும் இந்த தாக்குதலில் காசாவில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
ஹமாஸ் அமைப்பினர் இன்னும் சுமார் 100 பிணைக்கைதிகளை விடுவிக்காத நிலையில் போர் நீடித்துக் கொண்டே இருக்கிறது. எங்களது இலக்கை எட்டும் வரை போர் பல மாதங்கள் நீடிக்கலாம் என இஸ்ரேல் தெரிவித்து வருகிறது.
25105 பேர் உயிரிழந்த நிலையில் 62681 பேர் காயம் அடைந்துள்ளனர். சனிக்கிழமையில் இருந்து தற்போது வரை 178 உடல்கள் காசாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாக காசாவின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காசா மீதான தாக்குதலில் இதுவரை 195 வீரர்களை இழந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
காசாவில் உள்ள 85 சதவீதம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கியுள்ளனர். காசாவில் மொத்தம் 23 லட்சம் பேர் வசித்து வந்த நிலையில், மொத்த மக்கள் தொகையில் 25 சதவீதம் பேர் பட்டினியால் வாடுவதாக ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் 7ஆம் திகதி ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 240-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
அதன்பின் இஸ்ரேல் காசா மீது கண்மூடித்தனமான வகையில் தாக்குதல் நடத்தி வருகிறது.