அயோத்தியில் ராமர் சிலை நாளை பிரதிஷ்டை!

அயோத்தியில் ராமர் சிலை நாளை பிரதிஷ்டை!

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் மிக பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. மொத்தம் 108 ஏக்கர் பரப்பளவில் ராமர் கோவில் வளாகம் அமைகிறது.

அதில் 71 ஏக்கரில் ஆங்காங்கே தற்போது கட்டுமான பணிகள் நடக்கிறது. இதில் 5.7 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்குகளில் ராமர் ஆலயம் கட்டப்பட்டு வருகிறது.

360 அடி நீளம், 235அடி அகலம், 161 அடி உயரம் கொண்டதாக ராமர் ஆலயம் இருக்கும். இந்த ஆலயத்தில் 392 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 44 நுழைவு வாயில்கள் இருக்கின்றன.

மூலவராக 5 வயது பால ராமர் இடம் பெறுகிறார். ஆலயத்தின் மற்ற பகுதிகளில் விநாயகர், சிவன், அனுமன், சூரியன், துர்கா, அன்னபூரணி, வால்மீகி, வசிஸ்டர், விசுவாமித்திரர், அகத்தியர் உள்பட பல்வேறு சன்னதிகளும் கட்டப்பட உள்ளன.

கருவறையில் நாளை (திங்கட்கிழமை) பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

இதையொட்டி கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அயோத்தியில் பூஜைகள் நடந்து வருகிறது. இதன் காரணமாக அயோத்தி நகரம் திருவிழா கோலம் பூண்டு இருக்கிறது. இன்னொரு தீபாவளி போல அயோத்தி நகர மக்கள் ராமர் கோவில் பால ராமர் பிரதிஷ்டை விழாவை கொண்டாடி வருகிறார்கள்.

அயோத்தி கோவில் முழுவதும் நாடு முழுவதும் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. சிறப்பு மின் விளக்கு அலங்காரங்களும் செய்யப்பட்டுள்ளன. இதனால் அயோத்தி ராமர் கோவில் மின்னொளியில் ஜொலிக்கிறது.

அயோத்தி நகர் முழுக்க ஆங்காங்கே பிரமாண்டமான பதாகைகளை வைத்துள்ளனர். பல இடங்களில் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ராமரின் வில்-அம்பு வடிவங்களும் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளன.

ராமர் சிலை பிராண பிரதிஷ்டைக்கு முன்பு 7 நாட்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த வியாழக்கிழமை இரவு கருவறைக்கு பால ராமர் எடுத்து கொண்டு செல்லப்பட்டு பீடத்தில் நிறுவப்பட்டது.

பால ராமர் சிலை சுமார் 5 அடி உயரம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மைசூருவை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் இந்த சிலையை வடிவமைத்துள்ளார். 200 கிலோ எடை கொண்ட இந்த பாலராமர் சிலை 3 ஆயிரம் கோடி ஆண்டுகள் பழமையான கல்லில் உருவாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

நேற்று இந்த சிலையின் புகைப்படம் வெளியிடப்பட்டது. சமூக வலைதளங்களில் அந்த படம் வைரலாக பரவியது. இந்த புதிய சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கருவறையில் நேற்று வாஸ்து பூஜைகள் நடத்தப்பட்டன. இன்று (ஞாயிற்றுக்கிழமை)யாக சாலை பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

நாளை காலை பூர்வாங்க பூஜைகள் அனைத்தும் நிறைவு பெறும். இதையடுத்து நாளை மதியம் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும். நாளை அபிஜித் முகூர்த்த நேரத்தில் இந்த சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இந்த நேரம் நாளை பகல் 11.51 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணிக்குள் முடிகிறது. எனவே இந்த குறிப்பிட்ட நேரத்தில் பால ராமர் சிலையை பிரதிஷ்டை செய்ய உள்ளனர்.

அதிலும் மிகவும் நல்ல நேரமாக 12.29 நிமிடங்கள் 8 வினாடிகள் முதல் 12.30 நிமிடங்கள் 32 வினாடிகள் வரை என மொத்தம் 84 வினாடிகளில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி முன்னிலையில் இந்த பிரதிஷ்டை நடைபெறும். இதற்காக பிரதமர் மோடி 11 நாட்கள் இளநீர் மட்டும் அருந்தி மிக கடுமையான விரதத்தை மேற்கொண்டுள்ளார்.

வாரணாசி ஆலயத்தை சேர்ந்த ஆச்சார்யார்கள் முன்னிலையில் பிரதிஷ்டை விழா நடைபெற உள்ளது. ராமர் சிலை பிரதிஷ்டையின்போது சடங்குகளை முன்னின்று நடத்த நாடு முழுவதும் இருந்து 14 தம்பதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் தென் தமிழக ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஆடலரசனும், அவரது மனைவியும் இடம் பெற்றுள்ளனர். நாட்டின் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு பகுதிகளில் இருந்து 14 தம்பதிகளும் தேர்வாகி இருக்கிறார்கள்.

ராமர் சிலை பிரதிஷ்டையின்போது இந்த 14 தம்பதிகளும் பிரதிஷ்டை விழா தொடர்பான சடங்குகளை முன்னின்று நடத்துவார்கள். இதற்காக அவர்களுக்கு இன்று சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது.

விழாவில் சுமார் 8 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 8 ஆயிரம் பேரில் சுமார் 2 ஆயிரம் பேர் சாதுக்கள். மற்றவர்கள் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் ஆவார்கள். ஒரே இடத்தில் முக்கிய பிரமுகர்கள் விழாவில் பங்கேற்க இருப்பதால் அயோத்தி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

அயோத்தி ஆலயத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அயோத்தி முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

முக்கிய பிரமுகர்கள் பிரதிஷ்டை முடிந்ததும் வழிபடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கவும் அயோத்தி ஆலய அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

அயோத்தி ஆலய விழா நாளை நாடு முழுவதும் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இந்து அமைப்புகள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் தங்கள் பகுதிகளில் நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

நாடு முழுவதும் உள்ள ஆலயங்களிலும் நேரடி ஒளிபரப்புக்கு சிறப்பு ஏற்பாடுகள் நடந்து வருகிறது. உத்தரபிரதேசத்தில் சிறைவாசிகளும் அயோத்தி ஆலய விழாவை கண்டுகளிப்பதற்காக சிறைச்சாலைகளில் நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பால ராமர் பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு அயோத்தி முழுவதும் ஆங்காங்கே அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் பக்தர்களுக்கு லட்டு மற்றும் இனிப்புகள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான லட்டுகள் தயாரிக்கப்பட்டு அயோத்திக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது.

அயோத்தி ராமர் கோவில் விழாவை இந்தியா கூட்டணி தலைவர்கள் புறக்கணித்த நிலையில் பா.ஜ.க. கூட்டணி தலைவர்கள் இதில் பங்கேற்கின்றனர். பிரதிஷ்டை விழா நடைபெறும் நாளை முழுவதும் பொதுமக்கள் யாரும் ஆலயத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) முதல் பொதுமக்கள் அயோத்தி ஆலயத்துக்கு சென்று பால ராமரை வழிபடலாம். நாடு முழுவதிலும் இருந்து அடுத்த 2 மாதங்களுக்கு பொதுமக்களை அழைத்து வந்து ராமரை வழிபட வைக்க பாரதிய ஜனதா கட்சி சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

இதற்காக இந்தியா முழுவதும் முக்கிய நகரங்களில் இருந்து அயோத்திக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. தினமும் 1 லட்சத்துக்கும் மேல் பக்தர் கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் 5 அடி உயரமுள்ள பால ராமர் சிலை மிகப்பெரிய பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதனால் சுமார் 20 அடி தூரத்தில் வரும்போதே பால ராமர் சிலையை எளிதாக பக்தர்கள் பார்த்து வழிபட முடியும்.

CATEGORIES
TAGS
Share This