அமைதி போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் – பிரித்தானிய அனைத்துக்கட்சி நாடாளுமன்ற குழு விசனம்
வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் தலைவி சிவானந்தன் ஜெனிற்றா கைது செய்யப்பட்டமை கண்டிக்கத்தக்க விடயம் என பிரித்தானிய அனைத்துக்கட்சி நாடாளுமன்ற குழுவின் சிரேஷ்ட உறுப்பினரும் தொழில் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான சிவோன் மக்டோனா தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா வெளிவிவகார அமைச்சர் டேவிட் கெமரூனுக்கு அவர் எழுதிய கடிதத்திலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அமைதியாக போராட்டம் மேற்கொண்ட போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
போர் காலத்தின் போது இலட்சக்கணக்கான குழந்தைகள், சிறுவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இது வரையில் நீதி கிடைக்கவில்லை என்றும் சிவோன் மக்டோனா சுட்டிக்காட்டியுள்ளார்.
2020 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் சபையின் காணாமல் ஆக்கப்பட்டோரின் ஆணை குழு விடுத்துள்ள அறிக்கையின் படி, பொதுமக்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டோர் மீது வன்முறையை கட்டவீழ்த்து விடுவதை வன்மையாக தான் கண்டிப்பதாக கூறிய சிவோன் மக்டோனா, இவ்வாறான செயற்பாடுகளுக்கு வெளிவிவகார அமைச்சர் டேவிற் கேமரோன் கண்டனத்தை தெரிவிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில், குறித்த வழக்கு நாளை 12 ஆம் திகதி வவுனியா நீமிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்போது பிரித்தானியாவின் சார்பாக ஒரு பிரதிநிதியை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் பிரித்தானிய அனைத்துக்கட்சி நாடாளுமன்ற குழுவின் சிரேஷ்ட உறுப்பினரும் தொழில் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான சிவோன் மக்டோனா மேலும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 5 ஆம் திகதி வவுனியாவிற்கு சென்ற போது எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் தலைவி கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட அவரை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.