செப்டம்பரில் ஜனாதிபதி தேர்தல் – பொதுத் தேர்தல் ஜனவரி 2025
அடுத்த ஜனாதிபதித் தேர்தல் 2024 செப்டம்பரில் மற்றும் பொதுத் தேர்தல் 2025 ஜனவரியிலும் நடத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் முன்னாள் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று(09) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கட்சி சார்பற்ற வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக ஜனாதிபதி இந்த சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு இன்னும் சில மாதங்கள் முழுநேரம் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், தேசியத் தேர்தலில் வெற்றிபெற கட்சியின் அமைப்பை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் எனவும் தான் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் எனவும் ஜனாதிபதி அறிவித்ததாக, அகிலவிராஜ் காரியவசம் மேலும் தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது பொதுக்கூட்டத்தை காலி நகரில் ஜனவரி மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன இணங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.