யாழில் வேகமாக பரவி வரும் டெங்கு!
தீவிர டெங்கு பரம்பல் நிலமையைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் சுகாதார அமைச்சினால் விசேட டெங்கு கட்டுப்பாட்டு தினங்களாக ஜனவரி 08 ஆந் திகதி தொடக்கம் ஜனவரி 10 ஆம் திகதிவரை பிரகடனப்படுத்தப்பட்டள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த செய்தி குறிப்பில், இக்காலப்பகுதியில் வீடுகளையும் வேலைத்தலங்களையும் பொது இடங்களையும் குழுக்களாகப் பரிசோதனையிட்டு நுளம்பு பெருகும் இடங்களைக் கண்காணித்து அழிக்க திட்டமிடப்பட்டள்ளது. இப்பணியில் சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், உள்ளுராட்சி மன்ற உத்தியோகத்தர்கள், முப்படையினர், பொலீசார் மற்றும் ஏனைய தன்னார்வ தொண்டர்கள் இணைந்து ஈடுபடவுள்ளனர்.
முதல்நாளான 08ஆந் திகதி பாடசாலைகள், வணக்கஸ்தலங்கள், மற்றும் மயானங்கள் பார்வையிடப்படவுள்ளன. இரண்டாம் நாளான 09 ஆந்திகதி அரச தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கட்டட நிர்மானத்தளங்கள் பார்வையிடப்படவுள்ளன.
மூன்றாம் நாளான 10 ஆம் திகதி பொது மக்களின் வீடுகள் பார்வையிடப்படவுள்ளன.
எனவே பொது மக்கள் தமது வீட்டுவளாகங்கள் மற்றும் சுற்றாடலை துப்பரவு செய்து நுளம்பு பெருகக்கூடிய இடங்களை அழிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
வேலைத்தலங்களில் சிரமதான அடிப்படையில் நுளம்பு பெருகும் இடங்கள் சுத்திகரிக்கப்படல் வேண்டும். குழுப் பரிசோதனையின்போது டெங்கு பரம்பலுக்கு ஏதுவான நுளம்பு உற்பத்தியாகும் இடங்கள் உள்ள வீட்டு நிறுவன உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே டெங்கு நோயைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகள் வேலைத்தலங்கள் மற்றும் பொது இடங்களை துப்பரவாக வைத்திருந்து ஒத்துழைப்பு வழங்குமாறு வினயமாகக் கேட்டுக்கொள்கின்றோம். என்றுள்ளது.