ஒரு அமைச்சரை ஆளுநரால் இடைநிறுத்தம் செய்ய முடியாது: செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு!
அமைச்சரை இடைநிறுத்தம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்றும், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக பதவியில் தொடருவது குறித்து முதல்வர்தான் முடிவு எடுக்க முடியும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக மின்வாரிய மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக பதவி வகித்து வந்த செந்தில் பாலாஜியை, சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்தாண்டு ஜூன் 14ஆம் திகதி கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக அறிவித்து தமிழக அரசு கடந்த ஜூன் 16ஆம் திகதி அரசாணை பிறப்பித்தது.
இதையடுத்து செந்தில் பாலாஜியை பதவிநீக்கம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டார். பின்னர் சில மணி நேரங்களிலேயே இந்த உத்தரவை ஆளுநர் நிறுத்திவைத்தார். செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக அறிவித்த தமிழக அரசின் உத்தரவு மற்றும் அவரை பதவி நீக்கம் செய்ததை நிறுத்திவைத்த ஆளுநரின் உத்தரவு ஆகியவற்றை எதிர்த்து தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரான வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதுபோல செந்தில் பாலாஜி எந்த அடிப்படையில் அமைச்சராக பதவியில் தொடருகிறார் என விளக்கம் அளிக்கக்கோரி அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்தன், கொளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராமச்சந்திரன் ஆகியோரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோ-வாரண்டோ மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா தலைமையிலான அமர்வு கடந்த செப்டெம்பர் திகதி பிறப்பித்த உத்தரவில், ‘‘இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி எந்த அடிப்படையில் பதவியில் நீடித்து வருகிறார் என்ற மனுதாரர்களின் கவலை நியாயமானதுதான். இது அரசியலமைப்பு சாசன நெறிமுறைகளுக்கு எதிரானது மட்டுமின்றி, தார்மீக அடிப்படையில் சரியானதும் அல்ல. சிறந்த ஆட்சிக்கும், நிர்வாக தூய்மைக்கும் இது உகந்ததும் அல்ல. இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி பதவியில் நீடிப்பதால் எந்த பலனும் இல்லை. இந்த வழக்குகளில் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது. இருந்தபோதும் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்க வேண்டுமா என்பதை தமிழக முதல்வர்தான் முடிவு செய்ய முடியும். இதில் ஆளுநருக்கு எந்த பங்கும் கிடையாது எனக் கூறி வழக்குகளை முடித்து வைத்திருந்தனர்.
இந்த உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர் எம்.எல்.ரவி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி அபய் ஸ்ரீனிவாஸ் ஓகா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அமைச்சரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக பதவியில் தொடர வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து முதல்வர்தான் முடிவு எடுக்க முடியும். இந்த வழக்கில் சரியான உத்தரவைத்தான் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. எனவே இந்த மேல்முறையீட்டு மனுவில் தலையிட்டு எந்த உத்தரவையும் பிறப்பிக்க இயலாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.