வடக்கிற்கும், தெற்கிற்கும் இடையில் மீண்டும் இனவாதத்தை தூண்ட இடமளிக்க போவதில்லை: புதிய சட்டங்கள் ஊடாகவேனும் ஒழிப்போம்
வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் மீண்டும் இனவாதத்தை தூண்டவும் அதன் ஊடாக அமைதியின்மையை ஏற்படுத்தவும் ஒருபோதும் அரசாங்கம் இடமளிக்காது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
”கடந்த சில நாட்களாக மாவீரர் நிகழ்வுகள் தொடர்பில் கருத்துகள் வெளியாகியிருந்தன. உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூர உறவினர்களுக்கு முழுமையான உரிமை உள்ளதென அரசாங்கத்தின் நிலைபாடாக இருந்தது.
புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாக இருப்பதால் குறித்த அமைப்பின் கொடி, பாடல்களை நினைவேந்தல்களில் பயன்படுத்த முடியாதென கூறினோம். கடந்த 21ஆம் திகதிக்கும் 27ஆம் திகதிக்கும் இடையில் வடக்கில் 244 நினைவேந்தல் நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன.
இவற்றில் 10 நிகழ்வுகளில் மாத்திரம் புலிகளின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பில் பொலிஸார் சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளனர். சுன்னாகத்தில் ஒருவர் புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முற்பாட்டார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு யாழ்.நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதுடன், டிசம்பர் 4ஆம் திகதிவரை (நேற்று) அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வடக்கில் நடைபெற்ற நிகழ்வுகளை மையப்படுத்தி தெற்கில் சமூக ஊடகங்களில் உண்மைக்கு புறம்பான வகையில் கருத்துகள் பகிரப்பட்டன. இவர்கள் பகிர்ந்துள்ள படங்கள் மற்றும் காணொளிகள் 2018, 2017 காலப்பகுதிக்கு உரிவை என்பதுடன், அவற்றில் பெரும்பாலானவை வெளிநாடுகளின் நடத்தப்பட்ட நிகழ்வுகளுக்கானது.
அரசியல் ரீதியாக தோல்விகண்டுள்ள சில குழுக்களால் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. வடக்கில் ஒருவரும் தெற்கில் பலரும் இதுதொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொரலஸ்கமுவையில் இந்த குற்றச்சாட்டின் பிரகாரம் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். இவர் கடந்த பொதுத் தேர்தலில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட நபர். திட்டமிட்ட வகையில் மீண்டும் வடக்கிற்கும் தெற்கிற்கும் இனவாதத்தை தூண்டும் வகையில் இவர்கள் செயல்பட்டுள்ளமை அறிய முடிகிறது.
இந்த கைதுகளை ஊடகச்சுந்திரம் அல்லது ஜனநாயகத்துக்கு எதிரானது என்ற போர்வையில் கருத்துகளை முன்வைக்க சிலர் முற்படுகின்றனர். அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள கருத்து மற்றும் பேச்சு சுதந்திரத்தை பாதுகாப்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.
இனவாதத்தால் உருவாக்கப்பட்ட பிரச்சினைகளால் பல தசாப்தங்களாக எமது இளைஞர்கள் தமது உயிர்களை தியாகம் செய்திருந்தனர். ஆட்சியாளர்கள் தமது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளவும் பெற்றுக்கொள்ளவும் இனவாதத்தை பயன்படுத்திக்கொண்டனர்.
மலட்டு கொத்து என கூறி சிலர் அதிகாரத்தை கைபற்றினர். அதனால் அவர்களுக்கு நன்மை கிடைத்தது. ஆனால், நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை. என்மை பற்றியும் ஜனாதிபதி பற்றியும் போலியான காணொளிகளை உருவாக்கி பரப்புகின்றனர். ஆனால், அவற்றுக்கு நாம் அஞ்சப்போவதில்லை.
இனவாதத்தை தூண்டி இந்த நாட்டை மீண்டும் தீவைக்க அனுமதியளிக்க மாட்டோம். வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் மீண்டும் இனவாதத்தை தூண்டி அமைதியின்மையை ஏற்படுத்த நாம் சிறிதளவேனும் இடமளிக்க போவதில்லை.
இனவாதத்தை கட்டுப்படுத்த நாட்டில் தற்போது உள்ள சட்டம் போதுமானதாக இல்லாவிட்டால் புதிய சட்டங்களையேனும் உருவாக்கி இனவாதத்தை ஒழித்து நாட்டு மக்கள் எதிர்காலத்தில் ஐக்கியமாகவும் சமாதானமாகவும் வாழும் சூழலை உருவாக்குவோம்.” என்றார்.