தமிழரசு கட்சியின் அத்திவாரத்திற்கே வேட்டு: நோக்கம் என்ன என கேள்வியெழுப்பும் சிறிகாந்தா
ஒற்றையாட்சியை முன் வைத்துள்ள சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்குமாறு தமிழரசுக் கட்சி கோரியுள்ளமையானது தனது அத்திவாரத்திற்கே வேட்டு வைக்கும் செயல் என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என். சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.
யாழ் . ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“தமிழினத்தின் சுதந்திரத்தையும், சுயநிர்ணய உரிமை வேண்டும் என்ற கோரிக்கையுடன் தமிழ் தேசிய கட்டமைப்பாக நாம் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அரியநேத்திரனை களமிறக்கியுள்ளோம்.
தென்னிலங்கையின் பிரதான வேட்பாளர்களான ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, அநுர குமார திஸநாயக்க மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகிய நால்வரும் ஒற்றையாட்சி சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டு அதன் வழி நடப்பவர்கள்.
சஜித் பிரேமதாச ஒற்றையாட்சிக்கு வெளியே சென்று தீர்வு காணுவதாக மூச்சு கூட விடவில்லை. 13ஆம் திருத்தத்தை பற்றி பேசி இருக்கிறார். புதிய அரசியல் யாப்பை ஏற்படுத்தும் வரையில் 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாக கூறியுள்ளார்.
ஆனால் இணைப்பாட்சி பற்றியோ ஒற்றையாட்சி பற்றியோ எங்கேயும் குறிப்பிடவில்லை.
இந்த நிலையில் தான் தமிழரசு கட்சியினர் அவசரமாகக் கூடி சஜித் பிரேமதாசாவிற்கு வாக்களிப்போம் என கூறியுள்ளனர்.
இதன் மூலம் தமிழரசு கட்சி தமிழ் மக்களுக்கு எதனை சொல்லுகிறார்கள் என்பதனை தான் நாங்கள் கேட்கிறோம்.
இதுவரை காலமும் ஒற்றையாட்சிக்குள் இருந்து எம்மை விடுவிக்க வேண்டும் என நாம் தொடர்ந்து அரசியல் ரீதியாக போராடி வரும் நிலையில், ஒற்றையாட்சியின் வழி நடக்கும் சஜித் பிரேமதசாவை ஆதரித்துள்ளார்கள். இவர்களின் நோக்கம் என்ன ?
ஆகவே மக்கள் தமிழரசு கட்சியின் நோக்கத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.