ரணில், தினேஷ் இதுவரை வாக்குமூலம் வழங்கவில்லை
சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் ஊழல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் முன்னாள் அமைச்சர்கள் 18 பேரின் வாக்குமூலங்களை பதிவு செய்யுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், ரணில் விக்ரமசிங்க, தினேஷ் குணவர்தன, டிரான் அலஸ், சுசில் பிரேமஜயந்த மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் இதுவரை வாக்குமூலம் வழங்கவில்லை என சட்டமா அதிபர் திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பதின்மூன்று முன்னாள் அமைச்சர்களிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலங்களை குற்றப் புலனாய்வு திணைக்களம் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளது.
முன்னாள் சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த மோசடி அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கிய அமைச்சரவையின் ஏனைய அமைச்சர்களின் வாக்குமூலங்கள் இதுவரை பெறப்படாத நிலையில், அவர்களிடமிருந்து உடனடியாக வாக்குமூலம் பெற்றுக்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, பந்துல குணவர்தன, காஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணதுங்க, ஹரின் பெர்னாண்டோ, ரொஷான் ரணசிங்க, ரமேஷ் பத்திரன, விஜேதாச ராஜபக்ச, நளின் பெர்னாண்டோ, விதுர விக்கிரமநாயக்க மற்றும் நசீர் அஹமட் ஆகியோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.