புலிகளை நினைவேந்துவதற்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும்; அநுர அரசிடம் நவீன் வலியுறுத்து!
இலங்கையில் மரணித்த விடுதலைப்புலிகளை அஞ்சலிப்பதற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று முன்னாள் அமைச்சரும் முன்னாள் ஆளுநருமான நவீன் திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
தமிழர்களின் பகுதிகளான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இம்முறை மாவீரர் தினம் உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, விடுதலைப்புலிகளை அஞ்சலிப்பதற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று நவீன் திஸாநாயக்க கூறியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு நாம் முழுமையான எதிர்ப்பைப் பதிவு செய்கின்றோம். விடுதலைப்புலிகள் அமைப்பு என்பது சட்டவிரோத அமைப்பாகும். அந்த அமைப்பை நினைவுகூர முடியாது. எனது தந்தையையும் விடுதலைப்புலிகளே கொலை செய்தனர். புலிகளுடன் தொடர்புடையவர்களை நினைவுகூருவதற்கு நிரந்தரத் தடை விதிப்பது தொடர்பான உறுதியான முடிவை அநுர அரசு எடுக்க வேண்டும்.” – என்றார்.