சத்தியலிங்கத்துக்கு எதிராக சிவமோகன் வழங்கிய குற்றப் பத்திரிகையை வாங்க மறுத்த சுமந்திரன்!
வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் செயலாளர் ப. சத்தியலிங்கம் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றப் பத்திரிகையின் பிரதியை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் வழங்கிய போதும் அதனை சுமந்திரன் வாங்க மறுத்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் வவுனியா ஈரற்பெரியகுளத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று நடைபெற்றது.
இதன் போது கட்சியின் செயலாளரின் பொறுப்பற்ற தான்தோன்றித்தனமான செயற்பாடுகளால் கட்சியின் கூட்டுப் பொறுப்பு உருக்குலைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை விசாரணை செய்யுமாறு கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனால் கட்சியின் பதில் செயலாளருக்கு எதிராக குற்றப்பத்திரிகை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்தக் குற்றப் பத்திரிகையின் பிரதியை நேற்றைய கூட்டத்திற்கு வருகைதந்த அனைவருக்கும் சிவமோகன் வழங்கினார்.
இந்நிலையில் சுமந்திரனுக்கும் அதனை வழங்கிய போது அவர் அதனை பெற்றுக்கொள்ள மறுத்து விட்டுச் சென்றார்.
அந்தக் குற்றப் பத்திரிகையில்,
கட்சி மாநாட்டுக்கு முன்னர் ஆலோசனைக் கூட்டம் நடாத்தாமை, சுகயீனம் எனக்கூறி பொதுக்குழு கூட்டத்திற்குவராமை, யாப்பிற்கு முரணாக தேர்தல் நியமனக் குழுவை நியமித்தமை, கட்சி உருக்குலைய காரணமாக இருந்தமை, முல்லைத்தீவு மாவட்டக் குழுவின் ஆலோசனை இன்றி தேர்தல் நியமனங்களை வழங்கியமை போன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.