மனித உயிர் பறிக்கும் யாழ்., உடுப்பிட்டி வல்லைப் பாலம்
இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் யாழ்ப்பாணமும் ஒன்றாகும். மன்னராட்சி காலத்திலிருந்து பல சிறப்புகளையும் வரலாற்றினையும் தன்னகத்தே கொண்டதுதான் யாழ்ப்பாணம். 30 வருட யுத்தத்தினால் யாழ்.மண் பலமாக பாதிக்கப்பட்டிருந்தாலும் தற்காலத்தில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விதமாக கட்டி எழுப்பப்பட்டு வருகிறது.
யாழ் மாவட்டத்தின் உடுப்பிட்டியில் அமைந்துள்ள வல்லைப்பாலம் ஒரு புகழ்பெற்ற வரலாற்று சிறப்புமிக்க இடமாகும். இப்பாலம் யாழ்.மண்ணின் இயற்கை அழகையும் வாழ்க்கை முறையையும் பிரதிபலிக்கும் முக்கியமான கட்டுமானங்களில் ஒன்றாக காணப்படுகிறது.
வல்லைப் பாலம் வல்லைக் கடல் நீர் வழியைத் தாண்டி அமைக்கப்பட்டிருப்பதால் அதன் கட்டுமானம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த பாலம் கட்டப்பட்ட இடத்தின் நெருங்கிய சுற்றுப்புறம் தாழ்வான நீர்நிலைகளாலும் வயல்கள் மற்றும் கிராமப்புற இயற்கை காட்சிகளாலும் சூழப்பட்டுள்ளது. எனவே இந்த பாலம் இயற்கையுடனும், மண்ணுடனும் அடையாளம் காணப்படும் ஒரு பண்பாட்டுச் சின்னமாக இருக்கிறது.
இப்பாலமானது தற்போது ஆபத்தான நிலையில் உள்ளது. அதில் இருக்கின்ற ஆபத்து தொடர்பில் இதுவரை எவரும் கவனம் செலுத்தவில்லை. அதன் அடிப்படையில் யாழ்ப்பாணம் -பருத்தித்துறையை இணைக்கும் வீதியின் முக்கிய பாலமாக விளங்கும் வல்லைப் பாலமானது பழுதடைந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு வீதி அதிகார சபையால் செப்பனிடப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
1995 ஆம் ஆண்டு சூரியக்கதிர் நடவடிக்கை காலப்பகுதியில் குண்டுவைத்து தகர்க்கப்பட்ட குறித்த பாலமானது பின்னர் தற்காலிக பாலமாகவே பல தடவைகள் செப்பனிடப்பட்டு மக்களின் போக்குவரத்துக்கு விடப்பட்டு வந்துள்ளன. இந்நிலையில் யுத்தம் நிறைவடைந்த காலப்பகுதியில் இரும்புக் கேடர்களால் குறித்த பாலம் புனரமைக்கப்பட்டிருந்த நிலையில் அப்பாலத்தின் அலுமினிய தகடுகள் வழுக்கல் தன்மை உடையதாக இருப்பதினால் பல விபத்துக்கள் நடப்பதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டியிருந்ததுடன், அப்பாலத்தை கொங்கிரீட் பாலமாக அமைத்து தருமாறும் கோரி இருந்தனர். ஆனால் இன்றுவரை அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
வல்லைப் பாலத்தில் அண்மை காலத்தில் விபத்துக்கள் அதிகரித்துள்ளதால் எங்கள் உயிர்களை நாங்களே பாதுகாத்துக் கொள்வோம் எனும் முயற்சியில் கோப்பாய் பிரதேச செயலகம் நடவடிக்கை முன்னெடுத்துள்ளது. காலையிலும் மாலையிலும் வீதி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள் இருவர் சிவப்பு கொடியுடன் நின்று அவ்வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகளிடம் மெதுவாக பயணிக்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.
2004 ஆம் ஆண்டு திருத்த வேலை காரணமாக வல்லைப் பாலத்தினூடான போக்குவரத்துக்கள் தடை செய்யப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இருந்தும் இன்றுவரை இதற்கான நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை. வல்லைப் பாலத்தில் இருந்து தொண்டமனாற்றுப்பாலம் வரை இரண்டு மைல் நீளமான பகுதி உவர்நீர் தன்மை கூடியதும் மீன்பிடித் தொழில் நடைபெறும் பகுதியும் ஆகும்.
2022 ஆம் ஆண்டு வல்லைப் பாலத்தில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஒருவர் ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
அண்மையில் மழைக்காலம் ஏற்பட்டதனால் அப்பாலமானது வழுக்கும் தன்மையுடன் காணப்படுவதோடு, விபத்துகள் தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.
தனியார் நிறுவனமொன்றின் முகாமையாளர் 38 வயதுடைய நபர் வல்லைப் பாலத்தில் ஏற்பட்ட விபத்தால் அண்மையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மழைகாலங்களில் மாத்திரம் அன்றி வழுக்கும் தன்மை அபாயமாக இருப்பதோடு பனி பெய்யும் காலங்களிலும் வழுக்கும் தன்மையாக இருப்பதாக வாகன சாரதிகள் கூறுகின்றனர்.
பொதுமக்களது போக்குவரத்துக்கு தடையாக -ஆபத்தாக இருக்கும் இப் பாலத்திற்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்று மக்கள் வலியுறுத்துகின்றனர். பாலத்தினூடாக மேற்கொள்ளப்படும் போக்குவரத்துக்கு ஆபத்து இன்றி மக்கள் பாதுகாப்பாக பயணம் செய்வதற்கு வல்லைப் பாலத்தினை நிரந்தரமாக புனரமைத்து தர வேண்டும் என்பதே மக்களுடைய கோரிக்கை ஆகும்.இதனை உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுத்துச் செயற்பட வேண்டும்.