இன்று இலங்கை வருகின்றார் ஜெய்சங்கர்: ஜனாதிபதி அநுர உள்ளிட்டவர்களுடன் உயர்மட்ட பேச்சு

இன்று இலங்கை வருகின்றார் ஜெய்சங்கர்: ஜனாதிபதி அநுர உள்ளிட்டவர்களுடன் உயர்மட்ட பேச்சு

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று இலங்கைக்கு வருகைத்தரவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோரை சந்தித்து கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் அவரது குழுவினர் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

அமைச்சர் ஜெய்சங்கருடன் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் இந்த பயணத்தில் இணைந்துகொள்ளவுள்ளனர்.

புதிய அரசாங்கம் கடந்த வாரம் பதவியேற்றதன் பின்னர் வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்யும் முதல் சந்தரப்பம் இதுவாகும்.

இலங்கை ஜனாதிபதியுடனான இந்தச் சந்திப்பு, இலங்கையுடனான இந்தியாவின் இருதரப்பு உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்று இந்திய ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.

புதிய ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான முதலாவது உயர்மட்ட பேச்சுவார்த்தை இதுவாகும்.

அநுரகுமார திசாநாயக்கவை வாழ்த்திய முதல் உலகத் தலைவர்களில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அடங்குவார்.

அத்துடன், ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் அவரைச் சந்தித்த முதல் வெளிநாட்டு இராஜதந்திரி இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

CATEGORIES
Share This