பங்களாதேஷில் ஹிந்துக்கள் பேரணி; எட்டு அம்சக் கோரிக்கைகள் முன்வைப்பு

பங்களாதேஷில் ஹிந்துக்கள் பேரணி; எட்டு அம்சக் கோரிக்கைகள் முன்வைப்பு

பங்களாதேஷில் இடைக்கால அரசாங்கம் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அங்குள்ள ஹிந்துக்கள் பெரிய அளவிலான பேரணியை நடத்தியுள்ளனர்.

பங்களாதேஷின் சிட்டகாங் (சட்டோகிராம்) நகரில் உள்ள லால்திகி மைதானத்தில் ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள் ஒன்றுகூடி பேரணி நடத்தினர்.

இந்தப் பேரணியில் தற்போதுள்ள இடைக்கால அரசு தங்களது எட்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தப் பேரணியை பங்களாதேஷ் சனாதன ஜாக்ரன் மஞ்ச் அமைப்பு ஒருங்கிணைத்துள்ளது. கடந்த சில மாதங்களில் நடைபெற்றதிலேயே மிகப்பெரியதாகக் கருதப்படும் இந்தப் பேரணியில், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தலைநகர் டாக்காவுக்கு அனைவரும் ஒருங்கிணைந்து செல்லவிருப்பதாக போராட்டக் குழுவினர் எச்சரித்துள்ளனர்.

பேரணியில் அவர்கள் வைத்துள்ள 8 முக்கிய கோரிக்கைகள்:

1. ஹிந்து சிறுபான்மையினர் மீதான வன்கொடுமை நடவடிக்கைகள் குறித்த விசாரணைகளை விரைவுபடுத்த தனி தீர்ப்பாயம் அமைத்தல்.

2. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் மறுவாழ்வு வசதி.

3. சிறுபான்மையினர் பாதுகாப்புச் சட்டம் உடனடியாக இயற்றப்பட வேண்டும்.

4. சிறுபான்மையினர் அமைச்சை உருவாக்குதல்.

5. கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் சிறுபான்மையினருக்கான வழிபாட்டுத் தலங்களைக் கட்ட வேண்டும்.

6. ஒவ்வொரு விடுதியிலும் பூஜை அறைகள் அமைத்தல்.

7. சமஸ்கிருதம் மற்றும் பாலி கல்வி வாரியங்களை நவீனமயமாக்குதல்.

8. துர்கா பூஜைக்கு 5 நாள்கள் விடுமுறை.

கடந்த வியாழனன்று பங்களாதேஷில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சையது ரிஸ்வானா ஹாசன் வெளியிட்ட அறிக்கையில் ஹிந்துக்களின் கோரிக்கைகளை குறிப்பிட்ட அவர், துர்கா பூஜைக்கு இரு நாள்கள் விடுமுறை அறித்தார்.

பங்களாதேஷ் வரலாற்றில் துர்கா பூஜைக்கு விடுமுறை அறிவிப்பது இதுவே முதல்முறையாகும்.

பங்களாதேஷில் சமீபத்தில் தொடர்ந்து சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களுக்கு எதிராக இந்தப் பேரணி நடத்தப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா பதவி விலகியதிலிருந்து ஹிந்துக்களால் ஒருங்கிணைக்கப்பட்ட பெரிய பேரணி இதுவாகும்.

பங்களாதேஷின் இடைக்கால அரசின் தலைமையாகப் பொறுப்பேற்ற நோபல் பரிசுபெற்ற அதிபர் முகம்மது யூனுஸ் பாதுகாப்பு தொடர்பான வாக்குறுதிகளை அளித்தபோதிலும், தொடர்ந்து சிறுபான்மையினர் மீதான கொடூரத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

துர்கா பூஜையில் நடத்தப்பட்ட தாக்குதல்கள், ஹிந்துகோவில்களில் நடக்கும் திருட்டுகள் தொடர்பாக கண்டனம் தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை ’தொடர்ந்து நடைபெற்று வரும் அவமதிப்பு’ என இந்த சம்பவங்களைக் கண்டித்துள்ளது. மேலும், தொடர்ந்து வரும் பண்டிகைக் காலங்களில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு வழங்கவும் வலியுறுத்தியுள்ளது.

CATEGORIES
Share This