35% சம்பள உயர்வு சலுகையை நிராகரித்த போயிங் தொழிலாளர்கள்!
ஒரு மாதத்திற்கும் மேலான வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அண்மைய வாய்ப்பை அமெரிக்காவின் போயிங் தொழிலாளர்கள் நிராகரித்துள்ளனர்.
அவர்கள் நிராகரித்த சலுகையில், விமானம் தயாரிக்கும் நிறுவனம் வழங்கிய நான்கு ஆண்டுகளில் 35% சம்பள உயர்வு அடங்கும்.
64% உறுப்பினர்கள் உத்தேச ஒப்பந்தத்திற்கு எதிராக வாக்களித்ததாக போயிங் நிறுவனத்தின் இயந்திர வல்லுநர்கள் மற்றும் விண்வெளி பணியாளர்களின் சர்வதேச சங்கம் (IAM) அறிவித்துள்ளது.
இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் போயிங் 6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பை பதிவு செய்த அதே நாளில் வாக்கெடுப்பு வந்தது.
இது நிறுவனத்தின் வரலாற்றில் மிக மோசமான காலாண்டுகளில் ஒன்றாகும்.
சுமார் 33,000 தொழிலாளர்கள் செப்டம்பர் நடுப்பகுதியில் இருந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொழில்துறை நடவடிக்கையால் சியாட்டில் பகுதியில் அமைந்துள்ள 737 மேக்ஸ் மற்றும் 777 ஐ உற்பத்தி செய்யும் இரண்டு போயிங் தொழிற்சாலைகளின் செயற்பாடுகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.
அண்மைய வேலை நிறுத்தத்தினால் போயிங் பங்கு 1.76 சதவிகிதம் சரிந்தது, இந்த ஆண்டு இதுவரை அதன் பங்கு விலை கிட்டத்தட்ட 38 சதவிகிதம் வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
பணவீக்கம், பொருளாதார நெருக்கடி, வாழ்க்கைச் செலவினங்கள் அதிகரிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அடுத்த 4 ஆண்டுகளுக்கு 40 சதவீத சம்பளம் உயர்த்தப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.