யாரும் எங்களுக்கு ஆதரவு தரமுடியும்; எந்த ஆதரவினையும் நாங்கள் மறுக்கமாட்டோம்

யாரும் எங்களுக்கு ஆதரவு தரமுடியும்; எந்த ஆதரவினையும் நாங்கள் மறுக்கமாட்டோம்

யாரும் எங்களுக்கு ஆதரவு தரமுடியும். எந்த ஆதரவினையும் நாங்கள் மறுக்கமாட்டோம். வியாழேந்திரன் ஆதரவு தருவதாக கூறியுள்ளார். அவருக்கும் எங்களுக்கும் இடையில் எந்த உடன்படிக்கையும் இல்லை என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான தனது பிரசாரப்பணிகளை ஆரம்பிக்கும் வகையில் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இதன்போது சிறப்பு பூஜைகளில் கலந்துகொண்டதுடன் ஆதரவாளர்களுடன் வழிபாடுகளிலும் ஈடுபட்டதுடன் பிரசாரங்களையும் ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

ஜனநாயக தேசியக் கூட்டணி சங்குச் சின்னத்திலே மட்டக்களப்பு மாவட்டத்திலே ஆகக்கூடிய வாக்குகளைப் பெற்று அதிக ஆசனங்களைப் பெற்று தமிழ்த்தேசியத்திற்கும் எங்களுடைய மக்களின் அபிவிருத்திக்கும் முன்னேற்றத்திற்கும் எங்களுடைய கட்சிக்கு அதிகளவான வாக்குகள் கிடைப்பதற்கு மாமாங்கேஸ்வரர் உறுதுணையாக இருப்பார் என்ற நம்பிக்கையோடு பிரசாரத்தை தொடங்க இருக்கின்றோம்.

மத்தியிலே ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. அந்த ஆட்சி மாற்றத்தின் பால் தெற்கிலே மக்கள் அணிதிரளத் தொடங்கியிருக்கின்றார்கள். வடக்கிலே தமிழ்த் தேசியத்திற்காக அணிதிரள இருக்கின்றார்கள்.

மாற்றம் ஒன்று இந்த நாட்டிற்குத் தேவையென தெற்கிலே உள்ள மக்கள் விரும்பியிருக்கின்றார்கள். அதுபோன்று வடகிழக்கிலே உள்ள மக்களுக்கும் ஒரு மாற்றம் தேவை. அந்த மாற்றத்தின் அடிப்படையில் ஜனநாயக தேசியக் கூட்டணியின் சங்குச் சின்னத்திற்கு வடகிழக்குத் தமிழ் மக்கள் அமோகமான ஆதரவை வழங்கி மாற்றம் ஒன்றை உருவாக்குவதற்குத் தயாராக இருக்கின்றார்கள். வடகிழக்கிலும் ஒருசிலர் என்.பி.பி என்ற முகமூடியுடன் வரும் ஜே.வி.பிக்கு ஆதரவு வழங்குவதற்கு இருக்கின்றார்கள். அவர்கள் ஒன்றை உணர்ந்துகொள்ள வேண்டும். தெற்கிலே இருக்கின்ற மக்களது தேவைகள் வேறு, வடகிழக்கிலே இருக்கின்ற மக்களது தேவைகள் வேறு.

இங்கு ஏற்படுத்தப் போகும் மாற்றங்கள் வேறு. தெற்கிலே அரகல போன்ற போராட்டங்கள் நடைபெற்றது. அதன் அடிப்படையில் மாற்றம் உருவாகியது. ஊழலற்ற அரசொன்று உருவாக வேண்டும், நடுத்தர மக்கள் சுதந்திரமாகவும் தன்னிறைவோடும் வாழவேண்டும் என்ற நோக்கத்திலே மாற்றத்தை கொண்டு வந்திருக்கின்றார்கள்.

ஆனால் வடகிழக்கிலே தமிழ் மக்கள் உரிமையுடன் கூடிய அபிவிருத்தியை, சுயாட்சியை நாங்கள் உறுதிப்படுத்தி எங்கள் பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கான ஒரு மாற்றத்தை எதிர்பார்த்திருக்கின்றார்கள்.

அந்த மாற்றத்தை ஜனநாயக தேசியக் கூட்டணி மாத்திரமே சங்குச் சின்னத்திலே போட்டியிடும் வேட்பாளர்கள் மாத்திரமே உருவாக்கிக் கொடுப்பார்கள் என்பதை நான் உறுதியாகக் கூறுவதுடன் தமிழ்த் தேசியம் பேசும் ஏனையவர்கள் கூட கடந்த ஜனாதிபதித் தேர்தலிலே பெரும்பான்மையினக் கட்சிகளுக்குப் பின்னால் அவர்களை வெல்ல வைப்பதற்காக பாடுபட்டார்களே ஒழிய தமிழ்த் தேசியத்தின்பால் பொது வேட்பாளர் ஒருவரை நாங்கள் நிறுத்தி தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பை உருவாக்கி தமிழ் மக்களின் ஆதங்கத்தை வெளியிலே கொண்டு வருவது மாத்திரமல்லாமல் நாங்கள் ஒற்றுமையாக தற்காலத்திலும் எதிர்காலத்திலும் செயற்பட்டு தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற வேண்டும் என்பதற்கு எதிராகவே செயற்பட்டார்கள்.

நாங்கள் தமிழ் மக்களின் ஒற்றுமையை கருத்திற்கொண்டு ஐந்து கட்சிகள் இணைந்த ஒரு கூட்டணியின் சின்னமான சங்குச் சின்னத்தில் போட்டியிடுகின்றோம். எதிர்காலத்தில் தமிழ் மக்கள் ஒற்றுமையை விரும்பாத,தமிழ்த்தேசியத்திற்கு எதிராக இருந்துகொண்டு தமிழ்த்தேசியம் பேசும் அவர்களுக்கு ஒரு பாடத்தை புகட்ட வேண்டும். எதிர்காலத்தில் தமிழ்க் கட்சிகள் ஒற்றுமையாகச் செயற்படுவதற்கு ஒற்றுமையின் சின்னமான, தமிழர்களின் சின்னமான சங்குச்சின்னத்திற்கு வாக்களித்து அமோகமான வெற்றியை கொடுக்க வேண்டும்.

வியாழேந்திரனுக்கும் எங்களுக்கும் இடையே எந்த உடன்படிக்கையும் இல்லை.வடகிழக்கில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு மட்டக்களப்பில் மக்களின் ஆதரவு பெருகியிருக்கின்றது.அதனால் தமிழ் தேசியம் பேசும் கட்சிகளும் கூட எமது கூட்டணிக்கும் சங்கு சின்னத்திற்கும் எதிரான பிரசாரங்களை முன்னெடுத்துவருகின்றனர்.

சங்கு சின்னத்திற்கு பெரும் ஆதரவு குறித்து சிலருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. வியாழேந்திரன் போட்டியிட்ட கட்சியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது, அந்த வகையில் அவர் ஆதரவு தருவதாக கூறுகின்றார். எவர் ஆதரவு தந்தாலும் நாங்கள் மறுக்கமாட்டோம். யாராவது ஆதரவளிக்கு முன்வரும்போது அதனை வேண்டாம் என்று கூறமுடியாது.

அந்த வகையில் வியாழேந்திரன் ஆதரவு தருவதாக கூறியிருக்கின்றார். அவருக்கும் எங்களுக்கும் எந்தவிதமான உடன்படிக்கையும் இல்லையென்பதை உறுதியாக கூறுகின்றேன் என தெரிவித்தார்.

CATEGORIES
Share This