முன்னாள் இந்திய உளவுத்துறை அதிகாரி மீது அமெரிக்கா குற்றச்சாட்டு!
இந்தியாவிலிருந்து பிரிந்த சுதந்திர சீக்கிய நாடான காலிஸ்தானுக்காக வாதிடும் அமெரிக்கக் குடிமகன் ஒருவரை படுகொலை செய்வதற்கான சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் முன்னாள் இந்திய உளவுத்துறை அதிகாரி மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
அதன்படி, பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொல்ல முயன்றதற்காக விகாஷ் யாதவ் மீது “காசுக்குக் கொலை செய்தல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகள்” பதிவு செய்யப்பட்டுள்ளதாக நியூயோர்க்கின் தெற்கு மாவட்டத்திற்கான அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் வியாழக்கிழமை (18) தெரிவித்துள்ளது.
யாதவ் மீதான குற்றப்பத்திரிகை, முதல்முறையாக, ஒரு எதிர்ப்பாளரின் படுகொலை முயற்சியில் இந்திய அரசாங்கத்தை நேரடியாக குற்றம் சாட்டுகின்றது.
அமெரிக்காவின் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.
எனினும், யாதவ் மீதான குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளுக்கு இந்திய அரசு இன்னும் பதிலளிக்கவில்லை.
இந்த ஆண்டு தொடக்கத்தில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இந்தியர் நிகில் குப்தா, பிராக் சிறையில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
அமெரிக்க-கனடிய இரட்டை குடியுரிமை பெற்ற பன்னுன் மீதான கொலை முயற்சியில் இந்திய முகவர்கள் ஈடுபட்டதாக வொஷிங்டன் குற்றம் சாட்டியுள்ளது.
பன்னுன் தொடர்பான குற்றச்சாட்டை இந்தியா மறுத்தாலும், காலிஸ்தானுக்கு ஆதரவாக வாதிடும் ஆர்வலர் எனக் கூறி அவரை பயங்கரவாதி என்று முத்திரை குத்தியது.