இந்தியா என்னை தனிப்பட்ட முறையில் தாக்குகிறது; ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டு
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரத்தில் இந்திய அரசாங்கம் தன்னை தனிப்பட்ட முறையில் தாக்குவதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
அத்துடன், பொதுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான நடவடிக்கைகளில் இந்திய முகவர்களின் ஈடுபட்டமைக்கான “தெளிவான ஆதாரங்கள்” குறித்தும் அவர் கவலைகளை வெளியிட்டார்.
இந்நிலையில், கனேடிய மண்ணில் கடந்த ஆண்டு சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவும் கனடாவும் தங்கள் உயர்மட்ட தூதர்களை வெளியேற்றியுள்ளன.
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய முகவர்கள் நேரடியாக தொடர்புபட்டுள்ளனர் என்ற நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து தனது அரசாங்கம் எதிர்வினையாற்றியதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.
இந்திய முகவர்கள் “கொலைகள், மிரட்டி பணம் பறித்தல் மற்றும் வன்முறைச் செயல்களில்” ஈடுபட்டதாகவும், இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி தாயகத்தைக் கோரும் காலிஸ்தான் ஆதரவு இயக்கத்தின் ஆதரவாளர்களைக் குறிவைத்ததாகவும் கனேடிய பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எவ்வாறாயினும், அரசியல் ஆதாயத்திற்காக கனடாவில் சீக்கிய சமூகத்தை ட்ரூடோ அலைக்கழித்ததாக குற்றம் சாட்டியுள்ள இந்தியா, கனேடிய அரசாங்கத்தின் “அபாண்டமான” குற்றச்சாட்டுகளையும் நிராகரித்துள்ளது.
இந்நிலையில், திங்கள்கிழமை தொலைக்காட்சி நேரலையில் பேசிய ட்ரூடோ, கனடாவில் “குற்றவியல்” செயல்களை ஆதரிப்பதில் இந்தியா அடிப்படை பிழையை செய்துள்ளதாக குறிப்பிட்டார்.
இதன்படி, கனேடிய தேசிய பொலிஸ் சேவை (RCMP) மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்ட ஆதாரங்களை புறக்கணிக்க முடியாது, என்று அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
ஆனால் இந்தியா அனைத்து குற்றச்சாட்டுகளையும் கடுமையாக மறுத்துள்ளது மற்றும் கனடா தனது கூற்றுக்களை ஆதரிக்க எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளது.
நிஜ்ஜார் கொலையில் இந்திய முகவர்களை தொடர்புபடுத்துவதற்கான நம்பகமான ஆதாரங்கள் கனடாவிடம் இருப்பதாக ட்ரூடோ கூறியதிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது.
இந்த விரிசலானது உறவுகளில் சீர்குலைவுக்கு வழிவகுத்தது, இந்தியா தனது தூதரக ஊழியர்களை திரும்பப் பெறுமாறு கனடாவிடம் கேட்டுக் கொண்டதுடன் விசா சேவைகளையும் நிறுத்தியது.
இதன்படி, ஸ்டீவர்ட் ரோஸ் வீலர் உட்பட ஆறு கனேடிய தூதர்கள் அக்டோபர் 19 ஆம் திகதிக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சகம் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.
கனடாவின் நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க ரோஸ் வீலருக்கும் இந்திய வெளியுறவு அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.
எவ்வாறாயினும், இந்தியா கோரிய ஆதாரங்களை இந்திய அரசாங்கத்திடம் கையளித்துள்ளதாகவும் தற்போது குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் எனவும் ரோஸ் வீலர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கனடாவில் நடைபெற்று வரும் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விசாரணையில் இந்தியாவின் தூதர் மற்றும் பிற இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தபட்பட்டுள்ளதை தொடர்ந்து இந்தியா தனது தூதர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் கனடாவில் உள்ள பிற தூதரக அதிகாரிகளைத் திரும்பப் பெற முடிவு செய்துள்ளது.
மேலும், கனடாவில் உள்ள இந்தியாவின் தூதர் சஞ்சய் குமார் வர்மாவிற்கு வெளிப்படையான ஆதரவு தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சு அவர் மீதான இவ்வாற குற்றச்சாட்டுகளை வன்மையாகவும் கண்டித்துள்ளது.
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் 2023ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் திகதி பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் சீக்கிய கோவிலுக்கு வெளியே முகமூடி அணிந்த இரண்டு துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தனி சீக்கிய தாயகம் கோரும் காலிஸ்தான் இயக்கத்தின் முதன்மை ஆதரவாளராக இருந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் அதற்காக பகிரங்கமாக பிரச்சாரம் செய்தார்.
இந்தியா கடந்த காலங்களில் அவரை ஒரு தீவிரவாத பிரிவினைவாத குழுவிற்கு தலைமை தாங்கிய பயங்கரவாதி என்று அழைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.