வேட்பு மனுத் தாக்கல் இன்று நண்பகலுடன் முடிவு
நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள் இன்று வெள்ளிக்கிழமை நண்பகலுடன் முடிவடையவுள்ளது.
தேர்தலுக்கான அறிவித்தல் வெளியான பின்னர் கடந்த 04ஆம் திகதி முதல் வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன் அந்த நடவடிக்கைகள் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.
இந்நிலையில் பிரதான அரசியில் கட்சிகளும் மற்றும் சுயேச்சை குழுக்களும் இன்றைய தினத்திலேயே பெரும்பலான மாவட்டங்களில் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவுள்ளன.
22 தேர்தல் மாவட்டங்களிலும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன , எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் கூட்டணி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ரராஜபக்ஷ தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, திலித் ஜயவீர தலைமையிலான தாய்நாட்டு மக்கள் கட்சி ஆகியன தமது கூட்டணி கட்சிகளுடன் நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிடவுள்ளன. அத்துடன் ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய ஜனநாயக மக்கள் குரல் 20 தேர்தல் மாவட்டங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளன.
இதேவேளை இலங்கை தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் கட்சிகள் வடக்கு, கிழக்கிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிடவுள்ளன.
வேட்பு மனுத் தாக்கல் நடவடிக்கைகள் இன்று நண்பகல் 12 மணியுடன் முடிவடைந்த பின்னர் வேட்பு மனுக்கள் மீதான ஆட்சேபனைகள் இருப்பின் அதனை முன்வைப்பதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டு ஆட்சேபனை நடவடிக்கைகள் முடிவடைந்த ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்கள் மற்றும் நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பான அறிவித்தல்களை தேர்தல்கள் அதிகாரிகள் வெளியிடவுள்ளதுடன் அதன் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வாக்கெடுப்பு தொடர்பான அறிவித்தல் வெளியிடப்படும்.
இன்றைய தினத்தில்வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான இறுதித் தினம் என்பதனால் இன்றைய தினத்திலேயே அதிகமான கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வரும் என்பதனால் மாவட்ட செயலக பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.