மாலைத்தீவு ஜனாதிபதி டில்லிக்கு விஜயம்; நீண்டகால விரிசலின் பின்னர் வலுப்பெறும் இரதரப்பு உறவு
பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள மாலைத்தீவுக்கு இந்தியா உதவும் என அந்நாட்டு ஜனாதிபதி முகமது மூயிஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மாலைத்தீவு ஜனாதிபதி முகமது மூயிஸ் ஒக்டோபர் 06 திகதி முதல் 10 ஆம் திகதி வரை புதுடில்லிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இந்தியா தங்கள் நிதி நிலைமையை முழுமையாக அறிந்திருக்கிறது என்றும் தங்களின் மிகப்பெரிய வளர்ச்சி பங்காளிகளில் ஒருவராக, சுமையை குறைக்கவும், எதிர்கொள்ளும் சவால்களுக்கு சிறந்த மாற்று மற்றும் தீர்வுகளை கண்டறியவும் உதவும் என்றும் மூயிஸ் கூறியுள்ளார்.
மாலைத்தீவின் பொருளாதரத்தை கருத்திற் கொண்டு அவர் இந்தியாவிடம் நிதியுதவி கோருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியப் பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை மாலத்தீவு முன்னாள் அமைச்சர் , விமர்சித்தமை கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன்பின்னர் இந்தியர்கள் பலரும் மாலத்தீவுக்கு பயணம் மேற்கொள்வது குறைவடைந்தது.
சீன ஆதரவாளராக கருதப்படும் மூயிஸ் கடந்த வருடம் நவம்பர் மாதம் 17 ஆம் திகதி மாலைத்தீவு ஜனாதிபதியாக பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே, இந்திய – மாலைத்தீவு இருதரப்பு உறவுகளை சீர்குலைத்து, சுமார் 88 இந்திய இராணுவ வீரர்களை தனது நாட்டிலிருந்து அகற்றுமாறு உத்தரவிட்டார்.
மூன்று விமான தளங்களிலிருந்து இராணுவ வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் மற்றும் அவர் வழங்கிய காலவகாசத்திற்குள் அதாவது கடந்த மே மாதம் 10ஆம் திகதியன்று இந்திய இராணுவர்கள் அனைவரும் வெளியேறினர்.
இவ்வாறு தொடர்ச்சியாக இந்தியா – மாலத்தீவு இடையேயான உறவில் விரிசல் அதிகரித்த நிலையில், இந்தியாவின் புதுடில்லியில் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்கான அழைப்பை ஏற்று மாலத்தீவு ஜனாதிபதி முகமதுமூயிஸ் நிகழ்வில் கலந்துக்கொண்டிருந்தார்.
அதன்பின்னர் இந்திய – மாலைத்தீவு உறவில் இருந்த விரிசல் குறைவடைந்தது. இந்நிலையில் அவர் தற்போது இரண்டாவது தடவையாக புதுடில்லிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.