உண்மை மறைக்கப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்… நீதி மறுக்கப்பட்ட நவாலி தேவாலய படுகொலை !!…. நவீனன்

உண்மை மறைக்கப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்… நீதி மறுக்கப்பட்ட நவாலி தேவாலய படுகொலை !!…. நவீனன்

( சிறி லங்காவின் புதிய அரசு ஈஸ்டர் தாக்குதலை மீள விசாரிக்க உள்ளதாக தெரிவித்தாலும், நவாலி தேவாலயப் படுகொலைகளை விசாரிக்குமா என்பது சாத்தியமற்றதே.  சர்வதேச நீதி கோரி நிற்கும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைப் போல

சர்வதேச நீதி கோரலில் நவாலி தேவாலய படுகொலையும் இடம் பெற வேண்டும். இதன் மூலமே சர்வதேசம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும்)

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க ஆகியோர் மூடி மறைத்துள்ளதாக கொழும்பு பேராயர் இல்லத்தில் அருட்தந்தை சிரில் காமினி குற்றம்சாட்டியுள்ளார்.

அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இந்த மிலேச்சத்தனமான தாக்குதலை செய்ததாக அறியப்படுகிறது. ஐந்து வருடங்களாக எதற்காக இந்த ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தை இழுத்துக் கொண்டு போகின்றார்கள் என்பது தெரியவில்லை.

நாட்டில் கொலை கலாசாரத்தை ஆரம்பித்தது யார்? இந்தக் கொலைகளை சாதாரணமாக்கியது யார்? அரசியல் அதிகாரத்திற்கு வர நாட்டு மக்களின் உயிர்களை பலியொடுத்த தரப்பினர் யார் என்பதை நாட்டு மக்களும் புரிந்து கொள்வார்கள்.

இதன் பின்னால் எந்த அரசியல் சக்தி உள்ளது? எந்த எந்த அரசியல் அதிகாரிகள் இதன் பின்னணியில் உள்ளார்கள் என்பதை நாம் தேட வேண்டும் என அருட்தந்தை சிரில் காமினி குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சனல் 4 ஊடகத்தில் வெளியான ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான தகவல்களை ஆராய்வதற்காக குழுவொன்றை நியமித்திருந்தார்.

இந்தக் குழுவின் அறிக்கையும் அவரிடம் கையளிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த அறிக்கை சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டது. ஆனால், தற்போது குறித்த அறிக்கை காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக மிகவும் உறுதியான சாட்சிகள் மற்றும் தரவுகள் காணப்பட்டன. முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்சவோ, ரணில் விக்ரமசிங்கவோ இது தொடர்பாக ஆணைக்குழுக்களை அமைத்தாலும், அடுத்தக்கட்ட நகர்வுகளை அவர்கள் மேற்கொள்ளவில்லை என்றும் அருட்தந்தை சிரில் காமினி குற்றம்சாட்டியுள்ளார்.

ஏன் இப்படி செய்ய வேண்டும்? ஒன்று இவர்கள் இந்தத் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். அல்லது, தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் இவர்களது நெருங்கிய தரப்பினராக இருக்க வேண்டும். அப்படியானால் மட்டும் தான் இந்த விடயங்களை இவர்கள் மூடிமறைத்திருக்க வேண்டும் என்றும் அவர் அருட்தந்தை சிரில் காமினி தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்:

அப்பாவி உயிர்கள் பல காவுகொள்ளப்பட்ட அந்த நாட்களை தென்இலங்கையர்கள் வாழ்வில் ஆறாத வடுக்களாக மாற்றியது. இன்றுவரை அது மனங்களில் கணன்று கொண்டிருக்கிறது. இலங்கையில் கடந்த 2019 ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இலங்கையை மட்டுமல்ல சர்வதேச நாடுகளையும் உலுக்கிப் போட்டது.  

கோரமிக்க இந்த குண்டு தாக்குதலில் 250க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன் இதில் சில வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் உள்ளடங்குகின்றனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரித்தானியாவின் செனல் 4 ஊடகம் வெளியிட்ட ஆவணப்படத்தில் பல உண்மைத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் இரகசியங்கள் உடைக்கபடுமா அல்லது முடிவில்லாது விசாரணைகள், ஆணைக்குழுக்கள் என்று காலம் கடந்து கொண்டிருக்கிருமா எனத் தெரியவில்லை.

நவாலி தேவாலயத் படுகொலை:

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைப் போலவே 29 வருடங்கள் முன்பாக, நவாலி தேவாலயப் படுகொலையில் கொல்லப்பட்டவர்களின் வலி, உயிர்தப்பியவர்கள், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் நவாலி சமூகத்தின் மனதிலும் இதயங்களிலும் என்றும் எஞ்சிநிற்பதுடன் அந்தப் படுகொலை எப்போதும் நினைவிலிருக்கும்.

நவாலி தேவாலயத் தாக்குதல் யாழ்ப்பாணம்  (சென் பீட்டர் தேவாலய) மீது இலங்கை அரசு விமான குண்டு தாக்குதல் நடத்தி இன்று 29 வருடங்கள் கடந்து இருக்கின்றது.

யாழ். நவாலி தேவாலயத்தில் இருப்பது பொது மக்கள் என்று தெரிந்தே சிறீலங்காவின் விமானப் படையினர், தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தினார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் மட்டுமல்ல, சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் தெரிவித்தன.

இலங்கை விமானப் படையினரே குற்றவாளிகள் எனக் கூறப்படும் சூழலில், நவாலி தேவாலய தாக்குதலில் உயிர்தப்பியவர்களாலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினராலும் மற்றும் வடக்கிலுள்ள தமிழ் அமைப்புகளாலும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை அற்றுப்போய் விட்டது.

நவாலி சென் பீட்டர் தேவாலயத்தின் மீது இலங்கை அரசு விமான குண்டு தாக்குதல் நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு

29 வருடங்கள் கடந்தும் நீதி கிடைக்கவில்லை. ஆயினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச ஆதரவுகள் பல கிடைத்தன.

ஆனால் வடக்கு – கிழக்கில் அத்தகைய ஆதரவைப் பெற்றவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது கேள்விக்குறியாகும்.

பொது மக்கள் என்று தெரிந்தே தாக்குதல்:

1995ம் ஆண்டு ஜூலை 9 இல் யாழ்ப்பாணம் நவாலி தேவாலயம் (சென். பீற்றர்ஸ்) மீது இலங்கை விமானப் படையினரால் நிகழ்த்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 150 பேருக்கு மேல் காயமடைந்தனர். வலிகாமம் பகுதியில் இலங்கை அரசினரால் முன்னோக்கிப் பாய்தல் (லீப் ஃவோர்வேட்) இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட நாளில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது.

யாழ். நகரப் பகுதியில் இருந்து அராலி நோக்கி வந்து கொண்டிருந்த புக்காரா விமானம் தொடர்ச்சியாக 13 குண்டுகளை வீசியது. மாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற தாக்குதலில் தேவாலயம் பலத்த சேதமடைந்தது.

தமிழ் இனப் படுகொலை

நவாலி தேவாலய படுகொலை நினைவு நாளில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், “1995ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் திகதி கால கட்டத்தில் சிறீலங்கா விமானப் படையினரால் குண்டு தாக்குதல் நடாத்தி 100க்கும் மேற்பட்ட உயிர்கள் கோரமாக கொல்லப்பட்டு பல வருடங்கள் கடந்து இருக்கின்றது.

சந்திரிகா அரசின் ஆட்சி காலத்தில் தமிழர் தாயகப் பகுதியில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இராணுவ நடவடிக்கையின்  போது பொது மக்கள் ஆலயங்களிலும், தேவாலயங்களிலும் தஞ்சமடைந்து இருந்தார்கள். அப்போது இலங்கையினுடைய விமானப் படைக்கு சொந்தமான இரண்டு ‘புக்காரா’ விமானங்களால் தாக்குதல் நடத்தப்பட்டது.  இதில் சிறுவர்கள் பெரியவர்கள் பெண்கள் முதியோர்கள் என்று வேறுபாடு இல்லாமல் உடல் சிதறி பலியானார்கள் பலர் படுகாயம் அடைந்தார்கள்.

இது ஒரு அப்பட்டமான தமிழ் இனப் படுகொலையாகத் தான் நாங்கள் பார்க்கின்றோம். அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  மாறி மாறி ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கத்தாலும் நீதி வழங்கப்படவில்லை.

நினைவுச்சின்னங்களும் – நினைவு கூரும் வழிபாடுகளும்:

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நினைவுச்சின்னங்கள், கட்டுவாபிட்டி (நீர்கொழும்பு) மற்றும் கொச்சிக்கடை (கொழும்பு) ஆகிய இடங்களில் ஓரிரு மாதங்களிலேயே நிறுவப்பட்டதுடன், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் முதலாவது வருட பூர்த்தியை நினைவுகூருவதற்கான விரிவான பல ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அரசாங்கத்தின் வெளிப்படையான ஆதரவுடன் கொழும்பு மறைமாவட்ட பேராயரால் முதல் வருட நினைவு நிகழ்வுகள் தேசிய அளவில் நிகழ்த்தப்பட்டன. அத்துடன் தேசிய தொலைக்காட்சிகளில் நினைவு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன.

கொழும்பு பேராயரின் நீதிக்கான கோரிக்கைக்கு தேசிய ஊடகங்களில் முக்கிய இடம் வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர்தப்பியவர்களின் அதிர்ச்சியை மதிப்பதற்கும் ஏற்றுக் கொள்வதற்கும் துன்பத்திற்கு கண்ணியமளித்தல், நீதி மற்றும் இழப்பீடு என்பனவற்றுக்கும் இந்த நிகழ்வுகள் முக்கியமானதாகும்.

வடக்கில் நினைவுகூர மறுப்பு:

ஆயினும் தமிழர் பகுதிகளில் இத்தகைய நினைவுகூரலுக்கு உரிமை மறுக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் நவாலியில் பாதிக்கப்பட்டவர்களுக்காக அச்சமூகம் எளிமையான நினைவுச்சின்னம் ஒன்றை நிர்மாணித்துள்ளனர். வருடாந்தம் நினைவு நிகழ்வுகள் உள்ளுர் சமூகத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்படுகின்றன.

பல வருடங்கள் கடந்தும் கூட அந்த சோகத்தின் வலி, உயிர்தப்பியவர்கள், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் நவாலி சமூகத்தின் மனதிலும் இதயங்களிலும் எஞ்சிநிற்பதுடன் அந்தப் படுகொலைக்கான நீதி இன்னமும் கிடைக்கவில்லை.

தற்போது ஆண்டு தோறும் ஜூலை 9ம் நாள் நவாலி புனித பீற்றர்ஸ் ஆலயத்திலும், நவாலி சின்னக்கதிர்காமம் முருகன் ஆலயத்திலும் நினைவுகூரும் வழிபாடுகள் நடாத்தப்பட்டு வருகின்றன.

நவாலி வடக்கு சோமசுந்தரப் புலவர் வீதியிலும், நவாலி சென்.பீற்றர்ஸ் ஆலயப்பகுதியிலும் படுகொலைச் சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மூன்று ஆண்டாக திட்டமிட்ட ஈஸ்டர் தாக்குதல்:

275க்கும் அதிகமானவர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் ராஜபக்ச அரசுக்கு விசுவாசமாக செயற்பட்டவர்கள், இருந்ததாக 2024 செப்டெம்பர் 05 பிரித்தானியாவின் சனல் 4 வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ளதாக ’தி டைம்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பல வருடங்கள் ராஜபச்சக்களின் விசுவாசியாக இருக்கும் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் உதவியாளராக இருக்கும், ஹன்சீர் அசாத் மௌலானா என்பவர் வழங்கிய சாட்சியங்களின் அடிப்படையில் இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ‘தி டைம்ஸ்’ ஊடகம் தெரிவிக்கின்றது.

இலங்கையில் பாதுகாப்பற்ற நிலைமை உருவாக்கப்பட வேண்டும் என ராஜபக்சக்கள் விரும்புவதாகவும் அவ்வாறான ஒரு சூழ்நிலை இருந்தால் மட்டுமே கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக ஆட்சி பீடம் ஏற முடியும் எனவும் அவர்கள் கருதுகின்றனர் என சுரேஷ் சாலே தம்மிடம் கூறியதாக குறித்த நபர் தெரிவித்துள்ளார்.

இந்த குண்டு தாக்குதல் ஒன்றிரண்டு நாட்களில் திட்டமிடப்படவில்லை எனவும் மூன்று ஆண்டுகளாக திட்டமிடப்பட்டது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ராஜபக்சக்களை மீண்டும் ஆட்சி பீடம் ஏற்றுவதற்காக நாட்டை ஸ்திரமற்றதாக்கும் முயற்சியாக இந்த குண்டு தாக்குதல் அமைந்திருந்தது என தெரிவித்துள்ளார்.

அப்பட்டமான மனித உரிமை மீறல்:

நவாலி தேவாலயம் அகோர சம்பவத்தில் இறந்தவர்களுடைய உறவுகள் இன்னும் அந்த துன்பத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் உறவுகளுக்கு நினைவேந்தல் செய்வதற்கும் கூட அப்போதைய ஆட்சியாளர்கள் தடுத்து வந்தார்கள்.

படுகொலை செய்யப்பட்ட நினைவுச் சின்னங்கள் இருக்கின்ற இடங்களில் எல்லாம் கடந்த ஆண்டும் இம்முறையும் புலனாய்வாளர்கள் நிறுத்தப்பட்டு நினைவேந்தலை செய்வதற்கு இலங்கை அரசாங்கம்  தடை விதித்து வந்தது.

இது அப்பட்டமான ஒரு மனித உரிமை மீறலாகும். ஏனெனில் ஒரு உரிமைக்காக போராடிய இனம், அந்த போராட்ட காலத்தில் நடைபெற்ற படு கொலைகளை நினைவுகூற அரச ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் மறுத்து வருகின்ற நிலையில்,  பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்படி இந்த நாட்டில் நீதி கிடைக்கும் என்ற ஒரு கேள்வி எல்லோர் மத்தியிலும் எழுந்து இருக்கின்றது.

சர்வதேச நீதி வேண்டும் :

ஆகவே இவற்றிற்கு எல்லாம் ஒரு சர்வதேச நீதி பொறி முறை வேண்டும் என்பதற்காகத் தான் தமிழினம் சர்வதேச நீதி கோரி நிற்கின்றது. ஆகவே இந்த சர்வதேச நீதி கோரலில் நவாலி படுகொலையும் இடம் பெற வேண்டும். அந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

இவ்வாறான இந்த படுகொலைகளுக்கு நீதி கிடைக்கின்ற போது தான் எதிர் காலத்தில் தமிழ் மக்களுக்கு ஒரு உறுதியான பாதுகாப்பும் அவர்களுடைய உரிமைகளை உறுதிப்படுத்துகின்ற நியாயமான சூழ்நிலைகள் உருவாக சாத்தியமாகலாம்.

CATEGORIES
Share This