875 கோடி, மக்களின் வரிப் பணம் தேர்தல் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்தப்பட்டதா?: ரணில் மீது குற்றச்சாட்டு
ரணில் விக்கிரமசிங்கவுக்காக சாகல ரத்நாயக்க , கஞ்சன விஜேசேகர மற்றும் லக்ஷமன் யாப்பா அபேவர்தன ஏற்பாடு செய்திருந்த மாத்தறை மாவட்ட மாநாட்டிற்கு அநேகமானவர்கள் கொழும்பு உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்து அழைக்கப்பட்டிருந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விசேடமாக தென் மாகாண ஆளுநர் மகிந்த யாப்பா அபேவர்தன மற்றும் ஜனாதிபதி பணிப்பாளர் சாகல ரத்நாயக்க ஆகியோர் அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்து இந்த மாநாட்டிற்காக பொதுமக்களின் பணத்தை பயன்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
அவர்கள் எதிர்ப்பார்த்த மக்கள் தொகையில் பாதி கூட இதில் கலந்துக்கொள்ளவில்லை என இது வரையில் வெளியான தகவல்களில் தெரியவந்துள்ளது.
குறித்த மாநாட்டிற்கு வெளி மாவட்டங்களிலிருந்து பலரும் கலந்துக் கொண்டிருந்ததாக சமூக ஊடகங்கள் உள்ளிட்ட பிரதான ஊடகங்களில் கருத்து வெளியிட்ட பலரும் தெரிவித்திருந்தனர்.
விசேடமாக, மத்திய கொழும்பிலிருந்து பலரையும் அதற்காக அழைத்துச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும், குருவிட்ட, பலாங்கொட மற்றும் அம்பாந்தோட்டை பிரதேசங்களிலிருந்து இவ்வாறு பொதுமக்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நிதி ஒழுக்கம் பற்றி பேசும் ரணில், 875 கோடி ரூபாய், மக்கள் பணத்தை ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒதுக்கியுள்ளதாக வலியுறுத்தும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க , இந்த ஊழல் முறை தொடர வேண்டுமா என மக்களிடம் கேள்வி எழுப்புகிறார்.
தேசிய மக்கள் சக்தியின் ஹொரண பிரதேசத்தில் இடம்பெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர திஸாநாயக்க மேலும் மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
“ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் நிச்சயமற்ற தன்மை, பதற்றம் ஆகியவை நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பேச்சுவார்த்தைகள் தற்போது நிறைவடைந்துள்ளன.
ஜூலை 17ஆம் திகதிக்குள் ஜனாதிபதி தேர்தலை அறிவிக்கவும், வேட்புமனு தாக்கல் செய்யவும், தேர்தல் திகதியை முடிவு செய்யவும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்படும். ” எனவும் அவர் தெரிவித்தார்.