தமிழர்களின் நம்பிக்கையை பெறவிரும்பினால் சிங்கள பௌத்த தேசியவாதிகளை கவரும் முயற்சிகளை ஜனாதிபதி கைவிடவேண்டும்

தமிழர்களின் நம்பிக்கையை பெறவிரும்பினால் சிங்கள பௌத்த தேசியவாதிகளை கவரும் முயற்சிகளை ஜனாதிபதி கைவிடவேண்டும்

தமிழர்களின் நம்பிக்கையை பெறவிரும்பினால் சிங்கள பௌத்த தேசியவாதிகளை கவரும் முயற்சிகளை  ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க கைவிடவேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமூக ஊடக பதிவில் இதனை தெரிவித்துள்ள அவர் கடும் போக்குடைய சிங்கள பௌத்த தேசியவாதிகளை; கவரும் முயற்சியில் ஈடுபட்டால் தேசிய மக்கள் சக்தி புதிய ராஜபக்சாக்களாக மாறும் என தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

ஜனாதிபதி தேர்தலிற்கு பின்னர் இடம்பெறுகின்ற விடயங்களை பார்க்கும் நல்லாட்சி 2  என்ற உணர்வும்,முன்னர் நடந்ததை மீண்டும் அனுபவிக்கின்ற உணர்வும் எனக்கு ஏற்படுகின்றது.

ஜனாதிபதி வெற்றியடையவேண்டும்,தேசிய மக்கள் சக்திக்கு நாடாளுமன்ற பெரும்பான்மை கிடைக்கவேண்டும் என நான் விரும்புகின்றேன்.

அது நடைபெறாவிட்டால் கூட்டணி அரசாங்கமே ஒரேயொரு சாத்தியப்பாடாகயிருக்கும்.

தேசிய மக்கள் சக்தி எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என என்னால் ஊகிக்க முடியாது,மேலும் இலங்கை கூட்டணி அரசாங்கங்கள் விடயத்தில் சிறந்த வரலாற்றை கொண்டிருக்கவில்லை.

மகிழ்ச்சியும் நம்பிக்கையும் தவறுகள் இழைக்கப்படுவதை தூண்டுகின்றன.நல்லாட்சியில் இடம்பெற்ற விடயங்கள் மீண்டும் இடம்பெறாமலிருப்பதற்காக விமர்சனங்களை முன்வைக்கவேண்டிய தேவை காணப்படுகின்றது.

ஜனாதிபதியை விமர்சிப்பவர்களை தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் நியாயமற்ற விதத்தில் தாக்குவதும் கண்டிப்பதும் ஜனாதிபதிக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் வாக்களிக்காதவர்களிற்கு நம்பிக்கையை ஏற்படுத்தப்போவதில்லை.

தேசிய மக்கள் சக்தி கருத்துவேறுபாடுகளை பொறுத்துக்கொள்ளாத வழிபாட்டு மனப்பான்மை உள்ள குழு என்ற எண்ணங்களை இது வலுப்படுத்தப்போகின்றது.

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற சிங்கள வாக்காளர்களை கவரவேண்டும் என தேசிய மக்கள் சக்தி நினைப்பதை நான் புரிந்துகொள்கின்றேன்.

ஆனால் தேசிய மக்கள் சக்தி மூலோபாய ரீதியில் செயற்படவேண்டும்,நம்பவைக்ககூடியவற்றில் மாத்திரம் கவனம் செலுத்தவேண்டும்.

ஜனாதிபதிக்கு வாக்களித்தவர்கள் தேசிய மக்கள் சக்தி வித்தியாசமானது என கருதுபவர்கள் விலகிச்செல்லும் நிலையை ஏற்படுத்தக்கூடாது.

கடும் போக்குடைய சிங்கள பௌத்த தேசியவாதிகளை வசீகரித்தால் தேசிய மக்கள் சக்தி புதிய ராஜபக்சாக்களாக மாறும். வித்தியாசமானதாக அல்லது சிறுபான்மையினத்தவர்கள் நம்பக்கூடிய சக்தியாக விளங்காது.

1994 -2001- மற்றும் 2015ம் ஆண்டுகளில் அதிகாரத்திலிருப்பவர்களுடன் நெருக்கமான உறவுகளை கொண்டிருந்த சிவில் சமூகம் முறைசாரா ஆலோசகராக மாறியது,அல்லது நிழலில் செயற்பட்ட குழுக்களாக ,காணப்பட்டதுடன் செல்வாக்கு செலுத்தியது,சட்டங்களை கூட உருவாக்கியது.

2022 இல் ரணில்விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றபோது ராஜபக்சாக்களை விமர்சித்த சில சிவில் சமூக குழுவினர் ரணில்விக்கிரமசிங்கவை ஆதரித்ததுடன்,அவர் மனித உரிமைகளை மீறியதுடன், ஏதேச்சதிகாரிபோன்று ஜனநாயக விரோதமான முறையில் செயற்பட்டவேளை அதனை நியாயப்படுத்தியிருந்தன.

இது ஜனாதிபதி தேர்தலின் பின்னர் மீண்டும் இடம்பெறுவதை காண்கின்றோம்.

சிவில் சமூகத்தின் சில பிரிவினர் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவை விமர்சிக்ககூடாது அது அவரை பலவீனப்படுத்தும் அவருக்கு கால அவகாசத்தை வழங்கவேண்டும்.

இவர்கள் அவர்களின் தவறுகளை நியாயப்படுத்துகின்றனர்,அல்லது அலட்சியம் செய்கின்றனர்.

நல்லாட்சி அரசாங்கத்தின் போது மத்தியவங்கி பிணைமுறி மோசடி,யுத்தத்திற்கு பிந்தைய விவகாரங்களிற்கு தீர்வை காணதவறுதல் போன்றவை குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டவேளை இதேபோன்ற கருத்துக்கள் வெளியாகியிருந்தன.

நல்லாட்சி அரசாங்கத்தை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்த தவறியதன் காரணமாகவே ராஜபக்சாக்கள் மீண்டும் துரிதமாக ஆட்சிக்கு வரமுடிந்தது.

தற்போது அதுபோன்ற நியாயப்படுத்தல்களை காணமுடிகின்றது. உதாரணத்திற்கு தனிப்பட்ட தொடர்புகள் இருப்பதற்காக உரிய தகுதியற்றவர்கள் குறிப்பிட்ட பகுதிகளிற்கு நியமிக்கப்படுதல்

அதிகாரத்திற்கு நெருக்கமாகயிருப்பதை மாத்திரம் முக்கிய பரப்புரை தந்திரோபாயமாக கொண்டிருக்கும் சில சிவில் சமூகத்தினர் எவ்வாறான அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபடுவது என்பதை தீர்மானிக்க முடியாத நிலையில் காணப்படுகின்றனர்.

இது அனைத்தையும் உடனடியாக மாற்றமுடியாத இடைக்கால அரசாங்கம் என்பதை ஜனாதிபதியும் அரசாங்கமும் உணர்ந்துள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது.அதற்கு மக்கள் ஆணையில்லை மேலும் அது மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய குழப்பங்களை உருவாக்கலாம்.

அரசாங்கம் செய்யவேண்டிய செய்யக்கூடாத சில விடயங்கள்-

உங்களுடைய தனிப்பட்ட தொடர்புகளிற்காக உரிய தகுதியற்றவர்களை பதவிகளிற்கு நியமிக்கவேண்டாம் -ஜனாதிபதி ஊடகப்பிரிவிற்கு மருத்துவர் நியமனம்.

ஏற்கனவே இல்லாத புதிய பதவிகளை உருவாக்கி உங்களுடன் தனிப்பட்ட தொடர்பில் உள்ளவர்களை அதற்கு நியமிக்கவேண்டாம்.

ராஜபக்சாக்களின் தோல்வியடைந்த பேரழிவு கொள்கைகளை போற்றியவர்களை பதவிகளிற்கு நியமிக்கவேண்டாம்.

ஜனாதிபதி நிறுவனங்களின் செயற்பாடுகளை பொறுப்பேற்ககூடாது,மற்றும் சட்டபூர்வமாக வரையறுக்கப்பட்ட எல்லைகளிற்கு வெளியே செயற்படக்கூடாது-ஊழலிற்கு எதிரான விசாரணைகளிற்கு தலைமை தாங்ககூடாது அதில் தன்னை ஈடுபடுத்தக்கூடாது.

போலியானது மனித உரிமை மீறல்களிற்கு வழிவகுத்தது என நிரூபிக்கப்பட்டுள்ள  யுக்திய போன்ற செயற்பாடுகள் கொள்கைகளை நிறுத்துங்கள் .

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றால் சில விடயங்களை புதிதாக ஆரம்பிக்கவேண்டாம் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளில் இருந்து ஆரம்பியுங்கள் -அரசமைப்பு சீர்திருத்த நடவடிக்கைகளை ஆரம்பிக்கவேண்டாம்,ஆனால் நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்ததிலிருந்து ஆரம்பியுங்கள்.

தமிழர்களின் நம்பிக்கையை பெறவிரும்பினால் சிங்கள பௌத்த தேசியவாதிகளை கவருவதை நிறுத்துங்கள் தமிழர்களை சொல்லிலும் செயலிலும் சமமான பிரஜைகளாக நடத்துங்கள்.

யுத்த குற்றங்களி;ல் ஈடுபட்டார்கள் என கருதப்படுபவர்களை உயர்பதவிகளிற்கு நியமிப்பது சிறந்த ஆரம்பமில்லை.

CATEGORIES
Share This