”ஈரான் செய்தது மிகப் பெரிய தவறு”; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை

”ஈரான் செய்தது மிகப் பெரிய தவறு”; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை

இஸ்ரேல் – பலஸ்தீனத்துக்கு இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது.

இப் போரில் ஈரானின் முழு ஆதரவுப் பெற்ற லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினரும் ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களும் இஸ்ரேல் மீது தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறிருக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை ஈரானில் வைத்து இஸ்ரேல் கொலை செய்தது.

இச் சம்பவத்துக்காக இஸ்ரேலை பழி தீர்ப்போம் என ஈரான் கூறியிருந்தது. ஆனால், எதுவித நேரடி தாக்குதலையும் நடத்தவில்லை.

கடந்த வாரம் லெபனான் தலைநகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் மற்றும் ஈரானின் மூத்த இராணுவ தளபதி உள்ளிட்டோர் உயிரிழந்தனர். இதனையடுத்து இஸ்ரேலை பழி தீர்ப்போம் என ஈரான் வெளிப்படையாக அறிவித்தது.

இதனை நிகழ்த்திக் காட்டும் விதமாக, நேற்று செவ்வாய்க்கிழமை இரவு, இஸ்ரேல் தலைநகர் டெல் அவில் மற்றும் ஜெருசலேம் நகரங்களை இலக்காக வைத்து ஏவுகணைகளை வீசியது ஈரான்.

இத் திடீர் தாக்குதலால் இஸ்ரேலில் பதட்டமான சூழல் நிலவ, மக்கள் அனைவரும் பதுங்கு குழிகளுக்குள் சென்று பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டன. இத் தாக்குதலினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் தகவல் வெளிவரவில்லை.

இந்நிலையில், இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவரது எக்ஸ் தளத்தில் காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், “ஈரான் இன்றிரவு பெரிய தவறு செய்துவிட்டது. இதற்கு அவர்கள் பதில் கொடுத்தே ஆக வேண்டும். ஈரானின் இந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது. எதிரிகளுக்கு பதிலடி கொடுக்கும் எமது உறுதியை ஈரான் ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ளவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

எங்களுடன் மோதவேண்டாம்…என ஏற்கனவே இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதுதொடர்பில் ஈரான் ஜனாதிபதி மசூத் பெஸ்கியான் எக்ஸ் தளத்தில் இவ்வாறு பதிவிட்டிருந்தார்.

‘ஈரான் மக்களை பாதுகாக்கவே இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. ஈரான் போரை விரும்பவில்லை என்பதை நெதன்யாகு புரிந்துகொள்ள வேண்டும்.

எங்களுடன் மோத வேண்டாம். அதையும் மீறி ஏதேனும் அச்சுறுத்தல் வந்தால் அதனை வலிமையாக எதிர்கொள்வோம்’ எனப் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This