உறுதிகளை நிறைவேற்றுவாரா அநுரகுமார திஸாநாயக்க?
புதிதாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கொள்கைகள் மற்றும் வழங்கப்பட்ட உறுதி மொழிகள் குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியில் நிறைவேற்றப்படுகின்றனவா என்பது தொடர்பில் ஆராயவுள்ளதாக ஆசிய தேர்தல்கள் கண்காணிப்பு தொடரின் தலைவர், பஃப்ரல் (PAFFREL) அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
இது தொடர்பில் வருடாந்த மதிப்பீட்டு செயற்பாடு ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள பஃப்ரல் அமைப்பின் அதிகாரிகளை நியமித்துள்ளதாக ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
கொள்கைகளுக்கு ஏற்ப அரசாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுகின்றனவா என்பது ஆராயப்படுவதுடன் , அதனை பொதுமக்கள் அறிய வாய்ப்புகள் உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், இலங்கை முகங்கொடுத்துள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய விடயத்தை மேற்கொள்ள கூட்டு முடிவு என்பது அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.
அதற்காக நிர்வாக சேவையில் அதிகாரிகள் உள்ளிட்ட ஏனைய தொழிற் குழுக்கள், தொழிற்சங்கங்கள், வணிக சமூகம், சிவில் அமைப்புகள், அனைத்து அரசியல் கட்சிகள் உள்ளிட்ட துறைகளில் உள்ளவர்களுடன் தொடர்ந்து கலந்துரையாடி உடன்பட்டு இலங்கையில் இனங்கள் மற்றும் நாட்டை கட்டியெழுப்ப அவசியமான ஆதரவை வழங்க வேண்டும் என ரோஹண ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டினார்.
புதிய ஜனாதிபதி தேர்தல் சீர்திருத்தங்களை விரைவில் மேற்கொள்வார் என நம்பிக்கை வெளியிடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிதி சுதந்திரம், தேர்தல்களில் விசேட தேவைகள் உள்ளவர்களுக்கு தேவையான விடயங்களை விரிவுபடுத்துதல், தேர்தல் அட்டவணையை யதார்த்தமாக மாற்றுதல், பெண்கள் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவத்தை விரிவுபடுத்தல் அதனுள் முதன்மை என அவர் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் இருக்கும் வாக்குரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.