புதிய அரசாங்கத்தின் கீழ் நாமலுக்கு எதிரான முதல் வழக்கு; விசாரணைகள் ஆரம்பம்
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் அரச வாகனம் ஒன்றை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய இந்த விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இலங்கை மின்சார தனியார் நிறுவனத்தின் நலன்புரி திணைக்களத்திற்கு சொந்தமான வாகனம் ஒன்று, நாமல் ராஜபக்சவின் அனுராதபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தின் பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கடந்த 27ஆம் திகதி கொள்ளுப்பிட்டி பொலிஸார் கோட்டை நீதவானுக்கு அறிவித்துள்ளனர்.
அநுராதபுரத்தில் நடைபெற்ற ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் கூட்டத்தின் பிரசார நடவடிக்கைகளுக்காக இலங்கை மின்சார (தனியார்) நிறுவனத்தின் நலன்புரி பிரிவுக்குச் சொந்தமான வாகனம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வாகனம் பழுதுபார்ப்பு பணிக்கு அனுப்பப்படுவதாக தெரிவித்தே இவ்வாறு பயன்படுத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், குறித்த வாகனத்திற்கு சாரதியாக செயற்பட்டவரே இந்த வாகனத்தை எடுத்துச் சென்றுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
முதலில் கராஜ் ஒன்றுக்கு எடுத்துச் செல்லப்பட்ட இந்த வாகனம், மறு நாள் ஹொரவ்பொத்தானை பகுதியில் மரண வீடொன்றுக்கு செல்வதாக கூறி அனுராதபுரத்தில் இடம்பெற்ற நாமலின் பிரசார நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
லங்கா எலெக்ட்ரிசிட்டி தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான மொண்டிரோ ஜீப் ஒன்யே இவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.