இஸ்ரேல் – லெபனானில் தீவிரமடையும் போர்; இலங்கையர்கள் குறித்து வெளியான விசேட அறிவிப்பு
இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு வசிக்கும் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சு இதனை குறிப்பிட்டுள்ளது.
போர் காரணமாக லெபனான் மற்றும் இஸ்ரேலில் நிலைமை வேகமாக மாறிவருகின்றது.
எனினும் பெய்ரூட் மற்றும் டெல் அவிவ் ஆகிய நகரங்களில் உள்ள இலங்கை தூதரகங்கள் நிலமையை மிகவும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றது.
போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பணியில் தூதரகங்கள் ஈடுபட்டுள்ளன.
எவ்வாறாயினும், இதுவரை இலங்கையர் எவரும் பாதிக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, லெபனான் மீது அண்மைய நாட்களாக இஸ்ரேல் தொடர் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
இதில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.