அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம்: ஆக்ரோஷத்தில் பொதுமக்கள்

அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம்: ஆக்ரோஷத்தில் பொதுமக்கள்

அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான பல வாகனங்கள் காலி முகத்திடலுக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளதை காணமுடிந்தது.

இது தொடர்பான விசாரணையின் போது, ​​ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக பல்வேறு பணிகளுக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட 97 அரச வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அந்த அலுவலகத்தை அடுத்துள்ள காலி முகத்திடலுக்கு அருகில் நேற்று (24) முதல் அந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

புதிய ஜனாதிபதி ஆட்சிக்கு வந்ததன் பின்னர், வாகனங்களை பயன்படுத்தியவர்கள் வாகனங்களை நிறுத்தியுள்ளதாக நேற்று அந்த இடத்திற்கு விஜயம் செய்த தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

இவ்வாறு கொண்டு வந்து போடப்பட்ட வாகனங்களை பார்க்க பொதுமக்களும் வருகைத்தந்திருந்தனர்.

இதேவேளை, “DP” என்ற எழுத்துகளுடன் இலக்கத் தகடுகளுடன் கூடிய வாகனங்களும் அங்கு காணப்பட்டமை காணொளியாக பதிவு செய்யப்பட்டிருந்தது.

இராஜதந்திர சேவையில் உள்ளவர்களின் வாகனங்களுக்கு மாத்திரமே “DP” என்ற இலக்கத் தகடுகள் உள்ள வாகனங்கள் வழங்கப்படுவது வழமை.

ஆனால் இந்த வாகனங்கள் உண்மையில் இராஜதந்திர சேவையில் இருந்தவர்களுக்கு வழங்கப்பட்டதா அல்லது இராஜதந்திர சேவை என்ற பெயரில் வேறு சாதாரண நபர்களுக்கு இந்த வாகனங்கள் வழங்கப்பட்டிருந்தா என்ற சந்தேகங்களும் எழுகின்றன.

அரச சொத்துக்கள் எவ்வாறு துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளன என்பதை காலிமுகத் திடலில் கண்கூடாக பொதுமக்களால் காணக்கூடியதாக இருந்தது.

CATEGORIES
Share This