‘பொது வேட்பாளர் வேண்டாம்’: தமிழ்க் கட்சிகள் ரணிலுக்கே ஆதரவு
“ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் எல்லாம் தேவையில்லை.
தமிழ்க் கட்சிகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கே ஆதரவு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. முஸ்லிம் எம்.பிக்களும் ரணில் பக்கமே நிற்பார்கள்.”
இவ்வாறு முன்னாள் ஆளுநரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அஸாத் ஸாலி தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டம் தொடர வேண்டும் என்பதையே நாட்டு மக்கள் விரும்புகின்றனர்.
எனினும், இந்த வேலைத்திட்டத்தைக் குழப்பும் முயற்சியில் எதிரணிகள் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் கட்சிகளின் எம்.பிக்கள் ரணில் பக்கமே உள்ளனர்.
தமிழ்ப் பொது வேட்பாளர் அவசியமில்லை எனத் தமிழ்க் கட்சிகள் கூறுகின்றன. சி.வி. விக்னேஸ்வரன், ரணிலுக்கே ஆதரவு.
அவர் ஓய்வுபெற்ற நீதியரசர். நாட்டை எவரால் நிர்வகிக்க முடியும் என்பது அவருக்குத் தெரியும்.
நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரே தலைவர் ரணில்தான்.” – என்றார்.