மக்கள் கோபத்தினாலேயே வாக்களித்தனர்: தேர்தல் தோல்வி குறித்து சஜித் தரப்பு விளக்கம்
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வாக்களித்தது கோபத்தினாலேயே தவிர, நன்கு யோசித்து எடுக்கப்பட்ட முடிவை அல்ல என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் இக்கட்டான நிலையில் இருக்கும் நேரத்தில் புதிய ஜனாதிபதி தலைமையிலான அணிக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
அதற்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.
தேர்தல் தோல்வியினால் தனது கட்சித் தலைவர் எந்த வகையிலும் சோகமாக இல்லை.
இந்த ஆணையை ‘Anti – Establishment’ என்ற அடிப்படையிலோ அல்லது முழு அரசியலின் மீதும் இருக்கும் வெறுப்பின் அடிப்படையிலோ மக்களால் வழங்கப்பட்டது என்ற உண்மையை மதிக்க வேண்டும்.
எனவே, புதிய ஜனாதிபதியின் எதிர்கால பணிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.
எதிர்வரும் பொதுத் தேர்தலை எதிர்கட்சித் தலைவர் மற்றும் தமது கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் இன்றைய கலந்துரையாடல் இடம்பெற்றதாக சுஜீவ சேனசிங்க மேலும் தெரிவித்தார்.