இலங்கை வரலாற்றில் மற்றத்தை ஏற்படுத்தும் முக்கிய தேர்தல் அநுரகுமார தெரிவிப்பு; ரணில் மக்கள் ஆணைக்கு மதிப்பளிப்பார் எனவும் நம்பிக்கை
இலங்கையில் வரலாற்றில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒருதேர்தலாக உள்ளதென்று தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்கள் ஆணைக்கு மதிப்பளித்துச் செயற்படுவார் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9ஆவது ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு சனிக்கிழமை (21) நடைபெற்ற நிலையில், அபேசிங்கராமய பஞ்சிகாவத்தையில் உள்ள சைக்கோகி ஆரம்பபாடசாலையில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை வரலாற்றில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றதொரு தேர்தலாக இந்தத் தேர்தல் காணப்படுகின்றது. இலங்கையில் அரசாங்கத்தினை மாற்றுவதற்கும், தலைவர்களை மாற்றுவதற்கும் அரசாங்கங்களை கவிழ்ப்பதற்கும் இதுவரையில் தேர்தல்கள் வழிசமைத்துள்ளன.
ஜனநாயகத்தின் உயரிய விழுமியங்களில் மிக முக்கியமானது எந்தவொருவரும் தமக்கு விரும்பிய அரசியல் தலைவரை ஆதரிக்கவும், அவருக்கு வாக்களிப்பதற்கும், அவருடன் இணைந்து செயற்படவும் காணப்படும் உரித்துக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும்.
அந்த உரித்தினை பாதுகாப்பதுடன், வாக்களிப்பின் பின்னர், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வன்முறைகளிலோ அல்லது குழப்பமான நிலைமைகளோ ஏற்படுவதற்கு இடமளிக்கக் கூடாது.
எமது நாட்டுக்கு புதிய அரசியல் கலாசாரம் அவசியமாக உள்ளது. அரசியல் ஆதரவுக்காரணத்துக்காக வஞ்சிக்கப்பட்ட நிலைமைகள் ஒருபோதும் ஏற்படக்கூடாது. அமைதியாக பொதுமக்கள் தமது வெற்றியைக் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
அதேநேரம், தற்போதுள்ள ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கு அமைவாக புதிய ஜனாதிபதியிடத்தில் அதிகாரங்களை ஒப்படைப்பதோடு அவர் ஜனநாயக முறைப்படி நடந்துகொள்வார் என்றும் முடிவுகளின் பின்னர் தனது ஓய்வுகாலத்துக்குச் செல்வார் என்றும் எதிர்பார்க்கின்றேன்.
அதுமட்டுமன்றி, அவர் பலாத்காரமாக அதிகாரத்தை தக்கவைப்பதற்கோ, அல்லது வன்முறையான சூழலை ஏற்படுத்துவதற்கோ விளைய மாட்டார் என்பது தெளிவானதொரு விடயமாகும். மக்களின் ஆணைக்கு மதிப்பளித்து புதிய ஜனாதிபதிக்கு இடமளிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.