வடக்கில் தேர்தல் பணிகள் மும்முரம்; மிகுந்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்ட வாக்குபொட்டிகள்
யாழ்ப்பாணம்
நாளை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக யாழ் மாவட்ட வாக்கு எண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலிருந்து அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள் இன்று காலை 8 மணியிலிருந்து ஆரம்பமானது.
யாழ்.மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்களில் 4 இலட்சத்து 92 ஆயிரத்து 280 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குபெட்டிகள் அரச ஊழியர்களின் பங்களிப்பில் பொலிஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டது.
நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவு பகுதிகளில் வாக்குப் பெட்டிகளை எடுத்து செல்ல போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, தேர்தல் கண்காணிப்பாளர்களும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதனை காணக்கூடியதாக உள்ளதுடன் அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்குடன் விசேட அதிரடி படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான 137 வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்கு பெட்டிகள் முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட இலங்கை ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான நாடளாவிய ரீதியில் இடம்பெற இருக்கின்ற தேர்தலுக்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 137 வாக்களிப்பு நிலையங்களிற்கே வாக்கு பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இம்முறை தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 86,889 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் அவர்கள் வாக்களிப்பதற்குரிய 137 நிலையங்களுக்கும் முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் இருந்து இன்று (20.09.2024) காலை ஏழு மணி முதல் வாக்கு பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளளன.
குறித்த தேர்தலில் 1,506 அரச உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் 500 பொலிஸாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார்
நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாளை(21) காலை இடம்பெறவுள்ளது.
அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் 98 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
குறித்த நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் அனைத்தும் இன்று காலை ஒன்பது மணி முதல் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
மன்னார் மாவட்டத்தின் வாக்கெண்ணும் மத்திய நிலையமாக செயற்பட்டு வரும் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இருந்து குறித்த வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வாக்களிப்பு நிலையங்களுக்கு பொலிஸாரின் பாதுகாப்புடன் பேருந்துகளின் மூலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
இதேவேளை மன்னார் மாவட்டத்தில் 90 ஆயிரத்து 607 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வன்னி
வன்னியில் 387வாக்குப்பெட்டிகள் இன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
வன்னிமாவட்டத்தில் 387 வாக்குப்பெட்டிகள் மற்றும் தேவையான ஆவணங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அரச அதிபர் பி.எ. சரத்சந்திர தெரிவித்தார்.
தேர்தல் தொடர்பாக வவுனியா மாவட்டசெயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…..
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் 306081 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் 128585 வாக்காளர்களும், முல்லைத்தீவில் 86889 வாக்காளர்களும் மன்னார் 90607 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.
இதேவேளை தேர்தலில் வாக்களிப்பதற்காக மூன்று மாவட்டங்களிலும் 387வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அதற்கான வாக்குப்பெட்டிகள் மற்றும் தேவையான ஆவணங்கள் இன்று பேருந்துகள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் கடமைகளுக்காக வன்னிமாவட்டத்தில் 4796 அரச ஊழியர்கள் கடைமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் வவுனியா மாவட்டத்தில் பொலிஸார்,விசேட அதிரடிப்படையினர், ஊர்காவற்படை என 1500 பேர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
இதேவேளை வவுனியாவில் இதுவரை 36சிறியளவிலான தேர்தல் முறைப்பாடுகளே பதிவுசெய்யப்பட்டுள்ளது.
சாதாரண வாக்கு எண்ணும் பணிகளுக்காக வவுனியாவில்12,முல்லைத்தீவில் 8,மன்னாரில் 7 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், தபால் வாக்குகள் எண்ணுவதற்காக10 நிலையங்களும் எனமொத்தமாக 37வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை தபால் வாக்குகள் நாளை மாலை 6 மணியளவில் எண்ணுவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.