தமிழரசின் சுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி அவசரமாக,அவசியமாக தேவைப்படுகிறது

தமிழரசின் சுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி அவசரமாக,அவசியமாக தேவைப்படுகிறது

தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்க ஆசனப் பற்றாக்குறை ஏற்படுமிடத்து தமிழ் அரசுக் கட்சி ஆதரவு கொடுக்க வாய்ப்புள்ளது. சுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி அவசரமாக – அவசியமாகத் தேவைப்படுகிறது. வெளிவிவகார அமைச்சு இல்லையேல் நிதி அமைச்சில் அவர் கண் வைத்திருக்கிறார் என்று தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என். சிறிகாந்தா குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் ஜனார்த்தனனின் தேர்தல் பணிமனை நேற்று முன்தினம் கல்வியங்காட்டில் திறந்து வைக்கப்பட்டது. இதில், பங்கேற்று உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் ,

இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்குள் நுழைந்துள்ள சிலர் எதிர்வரும் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்க ஆசனங்கள் பற்றாக்குறையாக இருந்தால் அவர்களுக்கு ஆதரவளிக்க தாம் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளனர். தமிழர்கள் விடுதலையை – வீர சுதந்திரத்தை நாடியே நிற்கின்றனர். இதில், உறுதியாக

நின்றபடியால்தான் பல்வேறு சோதனைகளை தாங்கி வந்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டி தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று வந்த தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த சிலர் எதிர்வரும் அரசாங்கம் தேசிய மக்கள் சக்தியாக வரும் என்ற எதிர்பார்ப்போடு ஆசனப் பற்றாக்குறை ஏற்படுமிடத்து தாங்கள் கைகொடுக்கத் தயார் என்று தெரிவித்து, அதற்கு தமிழ் மக்களை தயார்படுத்தும் நடவடிக்கையிலும் இறங்கியிருக்கின்றனர்.

சுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி அவசரமாக, அவசியமாகத் தேவைப்படுகிறது. வெளிவிவகார அமைச்சர் பதவி இல்லையேல், நிதியமைச்சா பதவியில் கண் வைத்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டை நேரடியாக சுமத்துகிறேன்.

தமிழ் மக்கள், தமது சுயநல அடிப்படையில் சிங்கள அரசுகளுடன் சேர்ந்து செயற்பட்ட எந்தத் தமிழர்களையும் தமிழின உரிமைக் குரலோடு சம்பந்தப்படுத்தி பார்த்தது கிடையாது. தமிழர்களுக்கு நடைமுறையில் தீர்வு வராதவரை இப்படியான செயற்பாட்டை தமிழர்கள் ஜீரணிக்க மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

CATEGORIES
Share This