ரணிலுக்கு விடுதலைப் புலிகள் வழங்கிய தண்டனை; பா.அரியநேத்திரன் வெளிப்படுத்திய தகவல்
“தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினை இரண்டாக பிளவுபடுத்தியதற்காக விடுதலைப்புலிகளினால் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கிய தண்டனைதான் 2005ஆம் ஆண்டு தேர்தலை பகிஸ்கரிக்கச்செய்தது என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ளவேண்டும்.”
தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேத்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் தேர்தல் பிரசாரக்கூட்டம் நேற்று மாலை மட்டக்களப்பு கல்லடி மீனிசை பூங்காவில் நடைபெற்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேத்திரன் கலந்துகொண்டார்.
பா.அரியநேத்திரனை ஆதரித்து மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து ஆயிரக்கணக்கானோர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் உதவியுடன் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
போரை முடிவுக்கு கொண்டு வந்து தருகின்றோம், ஆனால் வட கிழக்கில் இணைந்த அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்திருந்தது. அதனை அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஏற்றுக்கொண்டிருந்தார்.
இந்த விடயத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருந்த இரா.சம்பந்தன் நாடாளுமன்றில் பலமுறை தெரிவித்திருந்தார். ஆனால் போர் முடிவுக்குகொண்டுவரப்பட்ட பின்னர் எதுவும் நடக்கவில்லை.
போர் முடிந்து பின்னர் மூன்று ஜனாதிபதிகளுக்கு நாங்கள் ஆதரவு வழங்கியிருந்தோம். அதில் மைத்திரிபால சிறிசேன மட்டுமே வெற்றிபெற்றிருந்தார்.
ஆனால் ஆட்சிக்கு வந்த எவருமே தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கவில்லை. ஆனால் இம்முறை அவர்களுக்கு நாங்கள் பாடம் கற்பிக்க வேண்டும்.
இதன் காரணமாகவே தமிழ் தேசிய சக்திகள் ஒன்றிணைந்து தமிழ் பொது வேட்பாளராக தன்னை முன்னிறுத்தியுள்ளதாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.