ஜப்பான் சந்தித்துள்ள நெருக்கடி: முதியோர் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு

ஜப்பான் சந்தித்துள்ள நெருக்கடி: முதியோர் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு

ஜப்பானில் இந்த ஆண்டு 65 வயதும் அதற்கு மேற்பட்ட வயதும் உடைய முதியோர்களின் எண்ணிக்கை 36.25 மில்லியன் என்னும் சாதனை அளவைத் தொட்டு உள்ளதாக அரசாங்கத் தரவுகள் தெரிவித்தன.

65 வயதும் அதற்கு மேற்பட்ட வயதும் உடைய 20.53 மில்லியன் பேர் பெண்களாகவும் 15.72 மில்லியன் பேர் ஆண்களாகவும் உள்ளனர் என்று ஜப்பானின் உள்நாட்டு விவகார, தொடர்புத் துறை அமைச்சு தெரிவித்தது.

வேகமாக மூப்படையும் உலக சமூகங்களில் ஜப்பானும் உள்ளது. தற்போதையை நிலவரப்படி, ஜப்பானின் மொத்த மக்கள்தொகையில் 29.30 விழுக்காட்டினர் மூத்தோராக உள்ளனர் என்று அமைச்சு கூறியது.

முதியோரை அதிகம் கொண்ட 200 நாடுகள் பட்டியலில் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது.

இத்தாலி, போர்ச்சுகல், கிரீஸ், பின்லாந்து, ஜெர்மனி, குரோவேஷியா போன்ற ஐரோப்பிய நாடுகள் முதல் 10 இடங்களில் உள்ளன. அந்த நாடு ஒவ்வொன்றிலும் 20 விழுக்காட்டினருக்கு மேற்பட்டோர் முதியோர்.

தென்கொரியாவில் அந்த விகிதம் 19.3 விழுக்காடாகவும் சீனாவில் 14.7 விழுக்காடாகவும் உள்ளது.

ஜப்பான் மோசமான மக்கள் தொகை நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. மூத்தோர் எண்ணிக்கை பெருகுவதால் மருத்துவம், நல்வாழ்வு போன்றவற்றுக்கான செலவுகள் அதிகரிக்கின்றன.

அதேநேரம் ஊழியரணி சுருங்கி வருகிறது. முதியோரின் மரணம் காரணமாக மக்கள் தொகையும் சுருங்குகிறது. தற்போது மக்கள் தொகை 124 மில்லியனுக்கு இறங்கிவிட்டதாக இதற்கு முன்னர் அரசாங்கம் வெளியிட்ட தகவல் குறிப்பிட்டது.

2023ஆம் ஆண்டு 9.14 மில்லியன் மூத்த குடிமக்கள் வேலையில் இருந்ததை அந்தத் தகவல் காட்டியது. அதுவும் ஒரு சாதனையே.

ஒட்டுமொத்த ஊழியரணியில் மூத்தோரின் விகிதம் 13.5 விழுக்காடாக உள்ளது. அல்லது ஏழு ஊழியர்களில் ஒருவர் முதிய வயதுடையவராக உள்ளார்.

2040ஆம் ஆண்டிற்குள் ஜப்பானின் மொத்த மக்கள் தொகையில் 34.8 விழுக்காட்டினர் மூத்தோராக இருப்பர் என்று தோக்கியோவில் உள்ள தேசிய மக்கள் தொகை மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் முன்னுரைத்து உள்ளது.

CATEGORIES
Share This