காசாவில் உயிரிழப்பு 39,000ஐ தாண்டியது: மக்கள் வெளியேற இஸ்ரேல் புது உத்தரவு

காசாவில் உயிரிழப்பு 39,000ஐ தாண்டியது: மக்கள் வெளியேற இஸ்ரேல் புது உத்தரவு


காசாவில் தொடர்ந்து மோதல் நீடிக்கும் நிலையில் கடந்த ஒன்பது மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் இடைவிடாது நடத்தும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 39,000ஐ தாண்டியுள்ளது.

தெற்கு நகரான கான் யூனிஸில் நேற்று இடம்பெற்ற சரமாரித் தாக்குதல்களில் 27 பேர் கொல்லப்பட்ட நிலையிலேயே பலி எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. புதிய போர் நடவடிக்கைகளை முன்னேடுக்கும் வகையில் காசாவின் சில பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


கான் யூனிஸின் கிழக்காக உள்ள பனீ சுஹைலா சிறு நகரில் இஸ்ரேலிய டாங்கிகள் நடத்திய சரமாரித் தாக்குதல்களில் குறைந்தது 16 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தப் பகுதிகளில் வானில் இருந்தும் குண்டுகளும் வீசப்பட்டுள்ளன.
கொல்லப்பட்டவர்களில் ஆறு சிறுவர்கள் மற்றும் நான்கு பெண்கள் அடங்குவதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பலரும் காயமடைந்திருப்பதாக அது கூறியது.

கொல்லப்பட்ட சடலங்கள் மற்றும் காயமடைந்தவர்களை ஏற்றிய ட்ரக் வண்டி ஒன்று கான் யூனிஸில் உள்ள அல் நாசர் மருத்துவமனையை அடைந்திருக்கும் வீடியோ ஒன்று இணையதளத்தில் பகிரப்பட்டுள்ளது.

இந்நிலையில் பலஸ்தீன போராளிகளின் புதிய தாக்குதல்களை அடுத்து பலஸ்தீனர்களை வெளியேறும்படி புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. இதில் கான் யூனிஸின் கிழக்கில் ரொக்கெட் தாக்குதல்கள் இடம்பெற்ற பகுதிகளில் இருந்தும் மக்களை வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வெளியேற்ற உத்தரவினால் 400,000 இற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக பலஸ்தீன சிவில் பாதுகாப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. வெளியேற்ற உத்தரவுக்கான துண்டுப்பிரசுரம் வீசப்பட்ட விரைவிலேயே மக்கள் வெளியேறுவதற்கு அவகாசம் இன்றி இஸ்ரேல் படை நடவடிக்கை ஆரம்பித்ததாக அங்கிருக்கும் அல் ஜசீரா செய்தியாளர் தெரிவித்துள்ளார். ஹமாஸ் முன்னணி தளபதிகள் உட்பட போராளிகளை இலக்கு வைத்தே இங்கு தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் கூறியபோதும் இந்தக் குற்றச்சாட்டுகள் பொய்யானது என்றும் தாக்குதல்களை நியாயப்படுத்த இவ்வாறு கூறுவதாகவும் பலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை காசா நகரை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அடையாளம் இடப்பட்ட ஐ.நா. வாகன தொடரணி மீது இஸ்ரேலியப் படை தாக்குதல் நடத்தியதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனத்தின் தலைவர் பிலிப்பே லசரினி எக்ஸ் சமூகதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கட்டார் மற்றும் எகிப்தின் மத்தியஸ்தத்துடன் இடம்பெறும் போர் நிறுத்த முயற்சிகளும் போர் தரப்புகள் இடையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் ஸ்தம்பித்துள்ளது.

பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைக்கு பொறுப்பான பிரதிநிதிகள் குழுவை வியாழக்கிழமை அனுப்புவதற்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமை (21) உத்தரவிட்டதாக பிரதமர் அலுவலகம் கூறியபோதும் அந்தத் குழு எங்கே அனுப்பப்படுகிறது என்பது பற்றிய விபரம் வெளியிடப்படவில்லை.

அமெரிக்க பிரதிநிதிகள் அவையில் உரையாற்றுவதற்காக நெதன்யாகு நேற்று (22) வொஷிங்டன் புறப்பட்டுச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This